முதலில் அறநிலையத்துறை நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்புங்கள்! - கடுகடுத்த நீதிமன்றம் | Rameswaram temple issue, High Court ordered to examine and record jewellery details

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (19/03/2019)

கடைசி தொடர்பு:13:20 (19/03/2019)

முதலில் அறநிலையத்துறை நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்புங்கள்! - கடுகடுத்த நீதிமன்றம்

ராமேஸ்வரம்  ராமநாதசுவாமி கோயில் நகைகளின் வகைகள், வடிவம் மற்றும் எடை ஆகியவை குறித்து நகை பதிவாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் மே 31- ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 12 வகையான நகைகள் மாயமானதாகக் கூறி ராமேஸ்வரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த எஸ்.பட்சி சிவராஜன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ``ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அருள்பாலிக்கும் பர்வதவர்த்தினி அம்மனுக்குச் சொந்தமாக வைரத் தாலி, வைர புல்லாக்கு,  வைர மூக்குத்தி, வைர நெக்லஸ், வைர நெத்திச்சுவடி, தங்கதாழம்பு, எமரால்டு திலகம், ப்ளூ ஸ்டோன் திலகம், வைரநெஞ்சு கவசம் உள்ளிட்ட 12 விதமான விலை மதிக்க முடியாத வைரம், வைடூரிய நகைகளைக் காணவில்லை.

இந்த நகைகள் கோயிலில் இருப்பதாக 1972-ம் ஆண்டின் கோயில் சொத்துப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 1995-ம் ஆண்டின் பட்டியலில் இந்த நகைகள் இடம் பெறவில்லை. எனவே, கோயிலில் இருந்து விலை மதிக்க முடியாத 13 விதமான நகைகள் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

ராமநாதசுவாமி கோயில் நகைகள் குறித்து வழக்கு தொடர்ந்த சிவராஜன்


 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு ``இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முக்கியமான கோயில்களில் நகை மதிப்பீட்டாளர் நகைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். நகை பதிவாளர் ஆண்டுதோறும் இதை உறுதிப்படுத்த வேண்டும். நகைகளை உறுதிப்படுத்தி ஆவணங்களில் நகை பதிவாளர் மற்றும் இணை ஆணையர் கையெழுத்திட வேண்டும். கோயிலின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை மதிப்பீடு செய்து ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கோயிலிலும் நகை, வைரம் மற்றும் அசையும், அசையா சொத்துகளை பராமரிக்க வேண்டும். இவற்றை ஒவ்வோர் ஆண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும். நகைகள் தொடர்பாக புகார் வந்தால் நகை மதிப்பீட்டாளர் மற்றும் நகைப் பதிவாளர் நகைகளின் ஆவணங்களை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை நகைகள் தொலைந்துவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலின் நகைகளின் வகைகள், வடிவம் மற்றும் எடை ஆகியவை குறித்து நகைப் பதிவாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் மே 31-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.