`இந்த தண்டனை பத்தாது; அதிகபட்ச தண்டனை கொடுக்கணும்!- யானையை வேட்டையாடிய வழக்கில் ஆர்வலர்கள் ஆதங்கம் | elephant hunters are arrested at Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (19/03/2019)

கடைசி தொடர்பு:13:30 (19/03/2019)

`இந்த தண்டனை பத்தாது; அதிகபட்ச தண்டனை கொடுக்கணும்!- யானையை வேட்டையாடிய வழக்கில் ஆர்வலர்கள் ஆதங்கம்

ந்தியாவில் வனவிலங்குகள் வேட்டையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், மலைப்பகுதிகளில் வேட்டையாடப்படும் விலங்குகளின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்த வேட்டைக்காரர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகமாகக் காணப்படுகிறார்கள். தற்போது, தந்தத்துக்காக யானையை வேட்டையாட முயற்சி  செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி மேட்டுப்பாளையம் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 8 வருடப் போராட்டத்துக்கு பிறகு இவர்களைக் கைது செய்து இருக்கிறார்கள், காவல்துறையினர்.

யானையை வேட்டையாடிய நால்வர்

கோவை வனக் கோட்டம், சிறுமுகை வனச்சரகத்தில் ஒடந்துறை காட்டுப் பகுதியில், தேனி மாவட்டம், வருச நாட்டைச் சேர்ந்த சென்ராயன், சிவா, குபேந்திரன், சிங்கம் ஆகியோர் 2011-ம் ஆண்டு தந்தத்துக்காக ஆண் யானையை வேட்டையாட முயன்றுள்ளனர். இது தொடர்பாக சிறுமுகை வனச்சரக அலுவலரால், வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது தேனி, கோவை, நீலகிரி, சிறுமுகை, சிறுமலை, கேரளா போன்ற இடங்களில் வேட்டையாடியதற்காக மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கும்போது தப்பி விட்டனர். இவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வன அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த 4 பேர் தவிர, இன்னும் சிலர் இந்த வழக்கில் தேடப்பட்டு வருகிறார்கள்.

மேற்கண்ட வழக்கில் கடந்த மார்ச் 12-ம் தேதி மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாற்றப்பட்ட குற்றவாளிகளுக்குக் காட்டுயானையை வேட்டையாட முயன்ற குற்றத்துக்கு ஒவ்வொருவருக்கும் தலா 10,500 ரூபாய் அபராதமும் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.  

இதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும், வனவிலங்கு பாதுகாப்பு சட்டமும் கடுமையாக்கப்பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.