வேட்பாளர்களாக களமிறங்கும் 100 விவசாயிகள்... அதிரும் 3 டெல்டா தொகுதிகள் | More than 100 farmers are competing in election

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (19/03/2019)

கடைசி தொடர்பு:17:59 (19/03/2019)

வேட்பாளர்களாக களமிறங்கும் 100 விவசாயிகள்... அதிரும் 3 டெல்டா தொகுதிகள்

election

கடந்த 2003-ம் ஆண்டு முதல் தேர்தல் பயன்பாட்டிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டோ போக 63 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் செயல்பாடு உள்ளது. இந்நிலையில் டெல்டாவில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நிலம், நீர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக தலா 100 வேட்பாளர்கள் களமிறங்குவதால் மின்னணு வாக்குப் பதிவு மூலம் வாக்களிப்பதில்  சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

வேட்பாளர்களாக களமிறங்கும் விவசாயிகள்

டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களைப் பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி, மத்திய, மாநில அரசுகள்  தொடர்ந்து நடைமுறைப்படுத்த முயல்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை, நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் நிலம், நீர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தலா 100 விவசாயிகள்   வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நடைமுறையிலுள்ள மாடல் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நோட்டோ போக 63 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும். அதற்கு மேல் போட்டியிட்டால் அந்தத் தொகுதியில் வாக்குச் சீட்டு மூலம்தான் தேர்தலை நடத்த முடியும் என்கிற நிலை உள்ளது. இந்த நிலையில், 100-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் என்ன செய்வது?

இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது, ``தற்போது புதிதாக வந்துள்ள மாடல் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 24 இயந்திரங்களை இணைக்க முடியும். இதன் மூலம் நோட்டோ போக 383 வேட்பாளர்கள் போட்டியிடலாம். வேட்பாளர் படம், சின்னம், பெயர் ஆகியவற்றை பிரெய்லி முறையில் பதிவு செய்ய முடியும். இதனால் பார்வையற்றவர்கள்கூட எளிதில் ஓட்டுப்போட வகை செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு இயந்திரம் செயல்பட 7.5 வோல்ட் பேட்டரிகளை கூடுதலாக இணைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி 383 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தேர்தலை எளிதாக நடத்தலாம்" என்றார்.

படம்: பா.பிரசன்னா