``கறுப்புப் பணம் என்பதே நம் நாட்டில் இல்லை, ஆனால்..” - டி.கே.ரங்கராஜன் ஓப்பன் டாக் | "Black money is not in our country" says T.K.Rangarajan

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (19/03/2019)

கடைசி தொடர்பு:14:39 (19/03/2019)

``கறுப்புப் பணம் என்பதே நம் நாட்டில் இல்லை, ஆனால்..” - டி.கே.ரங்கராஜன் ஓப்பன் டாக்

``கறுப்புப் பணம் என்பதே நம் நாட்டில் இல்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும், எம்.பி-யுமான டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

டி.கே.ரங்கராஜன்

புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மத்திய கமிட்டி உறுப்பினரும், ராஜ்யசபா எம்.பி-யுமான டி.கே.ரங்கராஜன், ``எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது உண்மையில் ஒரு போராட்டம். மத்திய பா.ஜ.க அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை போராடும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற புதுச்சேரி முதல்வர் நடுத்தெருவிலும், அமைச்சர்கள் டெல்லியிலும் போராட்டம் நடத்துகின்றனர். மாநில அரசின் பரிந்துரையின்றி நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கிரண் பேடி, மாநில அரசையும் செயல்பட விடாமல் தடுக்கிறார்.

மோடி

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுப்பது வாக்காளர்களை அவமதிக்கும் செயல். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி நல்லவர்தான். ஆனால், வல்லவர் கிடையாது. அதனால் அவருக்கு வணக்கம் வைக்கலாமே தவிர வாக்களிக்கக் கூடாது. ஏனென்றால் அவர் ஒரு மண் குதிரை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய வீடியோ ஆதாரங்களை அழிப்பதோடு, பல உண்மைகளை மூடி மறைக்கிறது அ.தி.மு.க அரசு. பா.ஜ.க-வினருக்கு ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை கிடையாது. அதனால் மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேர்தல் என்பதே நடக்காது. நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றுவதில்லை. எம்.பி-க்களின் உரிமை அங்கு மறுக்கப்படுகிறது.

கிரண் பேடி

பண மதிப்பிழப்பு விவகாரத்தில் எந்தவித விவாதமும் அங்கு நடைபெறவில்லை. அதேசமயம் அந்தத் திட்டம் தோல்வியில் முடியும் என மத்திய ரிசர்வ் வங்கி அப்போதே எச்சரித்தது. கறுப்புப் பணம் என்பதே நம் நாட்டில் இல்லை. ஏனென்றால் அவை அனைத்தும் தங்கம் மற்றும் வைர நகைகளாக, நிலங்களாக, போதைப் பொருள்களாக இருக்கிறது. வளர்ச்சி என்ற கோஷத்தோடு கடந்த தேர்தலில் இறங்கினார் மோடி. ஆனால், அப்படி எந்த வளர்ச்சியும் ஏற்படாததால், தற்போது ராமன், ஐயப்பன் என கோஷத்தை மாற்றிக்கொண்டார்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க