ஜீப்பில் வந்த தங்கம், வெள்ளி, வைர நகைகள்!- மதுரையில் தேர்தல் பறக்கும்படை காட்டிய அதிரடி | Madurai election squad caught gold and jewellery items

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (19/03/2019)

கடைசி தொடர்பு:17:59 (19/03/2019)

ஜீப்பில் வந்த தங்கம், வெள்ளி, வைர நகைகள்!- மதுரையில் தேர்தல் பறக்கும்படை காட்டிய அதிரடி

மதுரையில் வாகன சோதனையின்போது பல கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த நகைகள்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான வேலைகளை அரசியல் கட்சிகள் கடுமையான வெயிலிலும் சூடுபறக்க செய்துவருகின்றனர். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனும், அ.தி.மு.க வேட்பாளராக ராஜ் சத்தியனும், அ.ம.மு.க வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையும் களம் காண்கின்றனர். மதுரை தொகுதியில் இவர்களிடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர். மேலூர் டோல்கேட் அருகில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டுருந்தனர். அப்போது கும்பகோணத்திலிருந்து மதுரை ஏர்போர்ட் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் ஜீப்பை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஜீப்பில் 12 கிலோ மதிப்பிலான தங்கமும், 52 கிலோ மதிப்பிலான வெள்ளிப் பொருள்களும், 4 கேரட் அளவில் வைர நகைகளும் இருந்தது தெரியவந்துள்ளது.

 

ஜீப்பை சோதனை செய்யும் அதிகாரிகள்

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தையும் தங்கம், வெள்ளி, வைரத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தபின் வாகனத்தில் இருக்கக்கூடிய நகை பொருள்கள் வருமானவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மதுரையில் தொடர்ந்து நகைகள் பிடிபட்டுவருவதால் மதுரை மாவட்ட ஆட்சியர், 10 சிறப்பு பறக்கும் படை அமைத்து பல்வேறு இடங்களில் சோதனை செய்துவருகிறார்.