`பணம் கொடுத்தால்தான் இங்கு வேலை நடக்கும்!- பெண் வி.ஏ.ஓ-வை சிக்கவைத்த மாற்றுத் திறனாளி | `It works only if you pay money! The VaO has been displaced

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (19/03/2019)

கடைசி தொடர்பு:15:25 (19/03/2019)

`பணம் கொடுத்தால்தான் இங்கு வேலை நடக்கும்!- பெண் வி.ஏ.ஓ-வை சிக்கவைத்த மாற்றுத் திறனாளி

``அலுவலக பாரமரிப்பு, உயர் அதிகாரிகளுக்கென்று பல பேர்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது. பணம் கொடுத்தால்தான் இங்கு வேலை நடக்கும்" என்று பட்டா மாற்றத்துக்காக வந்த மாற்றுத்திறனாளியிடம் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ கைது செய்யப்பட்ட சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது.

                                          

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளி அருள் பாண்டியன். இவர் தன் தந்தை பெயரில் உள்ள சொத்தை தன் பெயருக்குப் பட்டா மாற்றம் செய்வதற்கு ஓலையூர் கிராம நிர்வாக அதிகாரி சுமதியிடம் மனு அளித்தார். அப்போது அவர் பேப்பரை பார்த்துவிட்டு, ``பட்டா மாற்றம் செய்ய அலுவலக செலவு மற்றும் உயர் அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது. 1000 ரூபாய் வரை செலவாகும்" என்று சொல்லியிருக்கிறார்.

                                         

அதற்கு அருள்பாண்டியன் எதிர்த்துக் கேள்விகேட்க, ``பணம் கொடுத்தால்தான் இங்கு வேலை நடக்கும். எல்லாத்துக்கும் நாங்கள் சும்மா வேலை பார்க்க முடியாது. எங்களுக்கு மேல் அதிகாரிகள் நெருக்கடி இருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார் வி.ஏ.ஓ.

                                          

அதற்கு அருள்பாண்டியன், ``மேடம் என்னிடம் டாக்குமென்ட் எல்லாம் சரியாத்தான் இருக்கிறது. பிறகு எதற்கு நான் லஞ்சம் கொடுக்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறார். அதற்கு, அவர், ``உங்களைப் போன்ற ஆட்களுக்குக் கொஞ்சம் தெனாவுட்டு அதிகமாகத்தான் இருக்கும்" என்று கடுமையான வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.

                                          

இதனால் கோபமுற்ற அருள்பாண்டியன், லஞ்சம் கொடுக்க விரும்பாமல் லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார் கொடுத்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை வி.ஏ.ஓ-விடம் லஞ்சமாக கொடுத்துள்ளார் அருள் பாண்டியன், அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் பெண் வி.ஏ.ஓ வை கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமதியைக் கைது செய்து அவரிடம் விசாரணை செய்தனர். மேலும், சுமதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.