`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்!' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி | clash between thanga.tamilselvan and dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (19/03/2019)

கடைசி தொடர்பு:14:40 (19/03/2019)

`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்!' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி

` நான் தேனியில் நிற்க விரும்பவில்லை. ஏற்கெனவே நிறைய செலவு செய்துவிட்டேன். இந்தமுறை செலவு செய்யக் கூடியவரை வேட்பாளராக நிறுத்துங்கள்' எனக் கூறிவிட்டார் தங்க.தமிழ்ச்செல்வன்.

`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்!' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி

ரசியலில் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கும் டி.டி.வி.தினகரன், இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்க முடியாமல் திணறி வருகிறார். ` தேனி மாவட்டத்துக்கு யாரை வேட்பாளராகப் போடுவது என்ற குழப்பமும் சீனியர்கள் சிலரின் கோபமும்தான் பட்டியல் தாமதம் ஆவதற்குக் காரணம்' என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். 

தினகரன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 30 நாள்களே இருக்கின்றன. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டுவிட்டன. இன்னமும் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடக் கூடிய தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. தினகரனின் அ.ம.மு.க-வும், 24 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. இதில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. `இது முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்' எனக் கூறப்பட்டாலும், ` ஆண்டிபட்டி தொகுதிக்கு தங்க.தமிழ்ச்செல்வன் பெயரை ஏன் அறிவிக்கவில்லை?' என்ற கேள்வி, அ.ம.மு.க வட்டாரத்தில் எழுந்துள்ளது. 

`` தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு முன்னதாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் தினகரன். பெரம்பூர் தொகுதிக்கு வெற்றிவேலை அறிவித்ததுபோல, ஆண்டிபட்டிக்குத் தங்கத்தின் பெயரை அறிவிக்கவில்லை. மற்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் செய்து வருகிறார் தினகரன். இதற்கு ஒரே காரணம், தேனி எம்.பி தொகுதிக்கு யார் வேட்பாளர் என்பதை தேர்வு செய்வதில் ஏற்படும் குழப்பம்தான்" என விவரித்த அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர், 

தங்க.தமிழ்ச்செல்வன்

`` மார்ச் 17-ம் தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் தினகரன். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர், மண்டல பொறுப்பாளர் என்ற முறையில் இந்தக் கூட்டத்தில் தங்க.தமிழ்ச்செல்வன் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், அ.ம.மு.க-வின் இரண்டாம் ஆண்டு விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. இதைக் கவனித்த தினகரன், 2 நாள்களுக்கு முன்பு தங்க.தமிழ்ச்செல்வனை அழைத்துப் பேசினார். அப்போது, ` உங்களுக்கு என்னதான் பிரச்னை?' எனக் கேட்டிருக்கிறார். இதற்குப் பதில் அளித்த தங்கம், ` நான் தேனியில் நிற்க விரும்பவில்லை. ஏற்கெனவே நிறைய செலவு செய்துவிட்டேன். இந்தமுறை செலவு செய்யக் கூடியவரை வேட்பாளராக நிறுத்துங்கள். தேனியில் விவேக்குக்கு சீட் கொடுத்தால், நான்தான் ஆட்பேசனை தெரிவிக்க வேண்டும். நான் எதுவும் சொல்லப் போவதில்லை. அவரைக் களத்தில் நிறுத்தி செலவு செய்யுங்கள். எதிர் முகாமில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வேட்பாளராகிவிட்டார். அவருக்கு எதிரான நல்ல சாய்ஸாக விவேக் இருப்பார். இரண்டு பசங்களுக்கு இடையிலான போட்டியாக அது இருக்கும். என்னை வேட்பாளர் என அறிவித்தால், வெற்றி பெறுவது கடினம். என்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது' எனக் கூறியிருக்கிறார். 

விவேக் ஜெயராமன்

இதன்பின்னர் பேசிய தினகரன், ` அப்படியானால், ஆண்டிபட்டியில் நில்லுங்கள்' எனக் கூறியிருக்கிறார். ` நீங்கள் விவேக்குக்கு சீட் கொடுத்துவிட்டு, எனக்கு ஆண்டிபட்டி தொகுதிக்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டால் கட்டாயம் நிற்கிறேன். இல்லாவிட்டால் வேறு யாரையாவது நிறுத்துங்கள். எனக்கு உடல்நிலையும் ஒத்துழைப்பதில்லை' எனத் தெரிவித்திருக்கிறார். இந்த விவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதனால்தான் இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது" என்கின்றனர் விரிவாக. 

`` தங்க.தமிழ்ச்செல்வனுக்கு இருக்கும் முக்கியமான பிரச்னை, செலவு செய்ய முடியாது என்பதுதான். தவிர, 2 முறை கண் ஆபரேஷன் செய்தபோதும், தலைமையில் உள்ளவர்கள் தன்னை வந்து பார்க்கவில்லை என்ற கோபமும் அவருக்குள் இருக்கிறது. வேட்பாளர் பட்டியல் தயாரானபோது, ` ஆண்டிபட்டியில் தங்கம் நிற்க வேண்டாம், தேனி எம்.பி தொகுதிக்கு நிற்கட்டும்' என்ற கருத்தை முன்வைத்தார் தினகரன். மேலும், டி.டி.வி பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம், ` 30 சீட் ஜெயிப்போம்' என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இந்தத் தேர்தலில் அதிகபட்சம் 2 சீட்டுகளை வெல்லலாம். அதுவும், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சிவகங்கை தொகுதி வேட்பாளராக சேவூர் பாண்டியன் நிற்கிறார். தேனியில் விவேக் நின்றால் வெற்றிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ` ஓ.பி.எஸ் மகனை வீழ்த்துவதற்கு விவேக் சரியான நபராக இருப்பார்' எனவும் அ.ம.மு.க-வுக்குள் பேச்சு நிலவுகிறது. இதையடுத்து, போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து விவேக் சார்பில் விருப்பமனு கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், அதிகாரபூர்வமாக கொடுத்ததாகத் தெரியவில்லை. 

தினகரன்

தேனி தொகுதியில் விவேக்கும் தங்கமும் நிற்கவில்லையென்றால், முன்னாள் எம்.எல்.ஏ மகன் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் எனவும் முடிவு செய்திருக்கிறார் தினகரன். முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானதிலும் சில அதிருப்திகள் இருக்கின்றன. இதுதொடர்பாக, எந்த மண்டல பொறுப்பாளரிடம் தினகரன் விவாதிக்கவில்லை என்ற ஆதங்கமும் சிலருக்கு இருக்கிறது. தஞ்சாவூர் தொகுதி வேட்பாளரான முருகேசன், கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை. பொன்னையா ராமஜெயம் கல்லூரியின் உரிமையாளராக அவர் இருக்கிறார். வேட்பாளராக அவர் பெயரை அறிவித்த பிறகுதான், கட்சிக்குள் வந்து சேர்ந்தார்" என்கின்றனர் அ.ம.மு.க-வின் தென்மண்டல நிர்வாகிகள் சிலர். 

தினகரன்

இதில் ஹைலைட்டான விஷயம், தேனி தொகுதிக்கு விவேக் பெயர் அடிபடுவது தெரிந்ததும், ` எனக்கும் சீட் கொடுங்கள்' எனக் கேட்கத் தொடங்கியிருக்கிறார் டாக்டர்.வெங்கடேஷ். ` குடும்ப ஆட்களுக்கு சீட் கொடுத்தால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்' எனத் தீவிர யோசனையில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன்.