நீதிபதி முன் மனைவியை கத்தியால் குத்திய கணவர் - சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பயங்கரம் | Husband try to kill wife before magistrate

வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (19/03/2019)

கடைசி தொடர்பு:14:24 (19/03/2019)

நீதிபதி முன் மனைவியை கத்தியால் குத்திய கணவர் - சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பயங்கரம்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில்,  நீதிபதி இளங்கோவன் முன் மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்திக்குத்து நடத்திய கணவன் சரவணன்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் கணவன், மனைவி உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், விவகாரத்து உள்ளிட்ட வழக்குகள் விசாரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் சரவணன், மாநகரப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரின் மனைவி வரலட்சுமிக்கும் இடையே குடும்பத்  தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பான வழக்கு முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்காக இருவரும் இன்று நீதிமன்றம் வந்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு வரும் முன்னர் நீதிமன்ற அறையில் இருவரும் ஒன்றாக அமர்ந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு பேசியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியது.

கத்தி

யாரும் எதிர்பாராத நேரத்தில் சரவணன் தன் மனைவி வரலட்சுமி மீது கத்தியை எடுத்துப் பாய்ந்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் வரலட்சுமியின் நெஞ்சின் மீது கத்தியால் குத்தியுள்ளார். நீதிபதி இளங்கோவன் முன்னரே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உடனே அங்கிருந்த காவலர்கள் சரவணனை மடக்கிப் பிடித்தனர். உடனே அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. கடுமையான காயத்துக்குள்ளான வரலட்சுமி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கத்திக்குத்தை நேரடியாகப் பார்த்த நீதிபதி இளங்கோவன், 30 நிமிடங்கள் பேச்சு வார்த்தையின்றி உறைந்துபோனார்.