`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்!'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ | There is no good management on Admk says markandeyan

வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (19/03/2019)

கடைசி தொடர்பு:18:17 (19/03/2019)

`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்!'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ

``அ.தி.மு.க-வுக்கு நல்ல தலைமை இல்லை. தனது செய்தி தொடர்பாளர் பொறுப்பினை ராஜினாமா செய்வதாகவும் மறுபரிசீலனையில் மீண்டும் என்னை வேட்பாளராக அறிவித்தாலும் நான் போட்டியிடத் தயாராக இல்லை" என  விளாத்திகுளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. மார்கண்டேயன் தெரிவித்துள்ளார்.

அதிமுக  முன்னாள் எம்.எல்.ஏ. மார்கண்டேயன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி. தகுதி நீக்கம் செய்யப்பட்டு காலியாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளில் இந்த தொகுதியும் ஒன்று. இத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இத்தொகுதியில் சீட் பெற முன்னாள் எம்.எல்.ஏ-க்களான மார்கண்டேயனும் சின்னப்பனும் காய் நகர்த்தி வந்தனர்.

மார்கண்டேயன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதனின் ஆதரவாளர். செய்தித்துறை அமைச்சரும் வடக்கு மாவட்டச் செயலாளருமான கடம்பூர் ராஜுவின் ஆதரவாளர்தான் சின்னப்பன். கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு அமைச்சர் கடம்பூர் ராஜு, ``மணல் கொள்ளையர்களுக்கெல்லாம் சீட் இல்லை" என தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே மீடியாக்களிடம் சொன்னார். ``சசிகலாவின் ஸ்லீப்பர் செல்தான் அமைச்சர் கடம்பூர் ராஜு." என எதிர்ப்பாய்ச்சல் பாய்ந்தார் மார்கண்டேயன்.

 முன்னாள் எம்.எல்.ஏ. மார்கண்டேயன் பேட்டி

அதிலிருந்து இருவரும் எதிருக்கு எதிராக முறுக்கிக் கொண்டே இருந்தனர். இந்த நிலையில், இத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக சின்னப்பன் அறிவிக்கப்பட்டார். சின்னப்பனைவிட மார்கண்டேயனுக்கு செல்வாக்கு அதிகம். சின்னப்பனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு தொகுதிக்குள் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டினார் மார்கண்டேயன். கூட்டத்தில் பேசிய மார்கண்டேயன், ``இடைத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே விளாத்திகுளத்தில் மார்கண்டேயனுக்கு சீட் இல்லை என கடம்பூர் ராஜு சொல்கிறார். யார் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என தலைமை சொல்வதற்கு முன்பே மீடியாக்களில் சொல்வதற்கு கடம்பூர் ராஜு யார். அ.தி.மு.க-வில் இப்போது தலைமை சரியில்லை. தலைமை சரியில்லாத கட்சியில்  செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து என்ன பயன்.

 முன்னாள் எம்.எல்.ஏ., மார்கண்டேயனின் ஆதரவாளர்கள்

அதனால், எனக்கு கொடுக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஓ.பி.எஸ்.ஸை நம்பினேன் அவர், அவரது தம்பிக்கும் மகனுக்கும் பதவி பெற்றுத் தருவதிலேயேதான் குறியாக இருக்கிறார். ஈ.பி.எஸ்.ஸிடம் கேட்டபோது, ``உங்களை வேட்பாளரா அறிவிச்சா, எம்.எல்.ஏ., பதவியையும் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிடுவேன் என கடம்பூர் ராஜு அவரது ஆதரவு அமைச்சர்களை சுற்றி வைத்துக்கொண்டு மிரட்டுகிறார்" எனச் சொன்னார்.

என்னை சமாதானம் செய்ய முற்பட்டு மீண்டும் எனக்கு சீட் கொடுத்தாலும் போட்டியிட நான் தயாராக இல்லை. கடம்பூர் ராஜுவுக்கு தேர்தல் வியூகம் தெரியாது. இங்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கூட பிரச்னை இல்லை. ஆனால், வழிநடத்தும் பொறுப்பில் உள்ள கடம்பூர் ராஜு வழிநடத்த தகுதி அற்றவர். இதுவரை அவரது வழிகாட்டுதல் தோல்வியில்தான் முடிந்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்துள்ள அ.தி.மு.க விரைவில் இணையும். எனது முடிவையும் விரைவில் அறிவிப்பேன்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க