''சி.பி.சி.ஐ.டி வழக்கைத் திசை திருப்புகிறது!'' - பொள்ளாச்சி சம்பவம் குறித்து உ.வாசுகி | ''There is no Act to protect the sexual victim in India'' says Vasuki

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (19/03/2019)

கடைசி தொடர்பு:17:50 (19/03/2019)

''சி.பி.சி.ஐ.டி வழக்கைத் திசை திருப்புகிறது!'' - பொள்ளாச்சி சம்பவம் குறித்து உ.வாசுகி

கவர்ன்மென்ட் ஆர்டர், எப்.ஐ.ஆர். இரண்டுமே பப்ளிக் டொமைனுக்கு வந்துவிட்டது. அதனால், பப்ளிக் டொமைனுக்கு வரக்கூடிய எந்த டாக்குமென்டிலும் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் இருக்கக்கூடாது

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில், பாதிக்கப்பட்டு புகார் அளித்த பெண்ணின் பெயரைக் காவல்துறை வெளியிடுகிறது; அரசு ஆர்டரிலும் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் வருகிறது. இப்படியோர் அசாதாரண நிகழ்வு மறுபடியும் நிகழாமல் இருக்க, ஜனநாயக மாதர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்று உ.வாசுகியிடம் கேட்டோம்.

பாலியல் வன்முறை

``பொள்ளாச்சி சம்பவத்தை, லோக்கல் போலீஸ் விசாரித்துக்கொண்டிருந்தபோது சி.பி.சி.ஜ.டி அல்லது சி.பி.ஐ.யிடம் வழக்கை மாற்றச் சொல்லிக் கேட்டு நீதிமன்றத்தை அணுகலாம் என்று வழக்கறிஞர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள், வழக்கு சி.பி.சி.ஜ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ.க்குப் போய்விட்டது. ஆனால், இந்த வழக்கில் இன்னமும் சி.பி.சி.ஜ.டி. தொடர்ந்து இன்வெஸ்ட்டிகேஷன் நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் மேல் நம்பிக்கையில்லாத நிலையில் இவர்களே தொடர்ந்து விசாரணை நடத்துவது, வழக்குத் தொடர்பான ஆதாரங்களைத் தேடுவது, அதைக் கைப்பற்றுவது என்று வழக்கைத் திசை திருப்புகிற வேலையை சி.பி.சி.ஜ.டி. செய்கிறதோ என்கிற அச்சமும் எங்களுக்கு இருக்கிறது. அதனால், இதையும்  நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கிறோம். அதே நேரம் ஒரேயொரு பிரச்னையை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லாமல், இதை ஒரு பொதுப்பிரச்னையாக எடுத்துச் செல்ல நினைக்கிறோம். உதாரணத்துக்கு பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிடுவது, அவர்களைப் பலமுறை காவல்நிலையத்துக்கு வரவழைத்து அலைக்கழிப்பது என்று இல்லாமல் ஒரே இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை, கவுன்சலிங், காவல்துறையும் அங்கேயே  வந்து புகாரை பதிவு செய்யும் வசதிகொண்ட one stop crisis centre-ஐ (இதை மத்திய அரசு ஏற்கெனவே முன்மொழிந்துள்ளது) சரியாக இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தை அணுகப் போகிறோம்'' என்றவர், புகார் தெரிவித்த பெண்ணின் பெயர் வெளியானது தொடர்பாக பேசத் தொடங்கினார். 

வாசுகி - ஜனநாயக மாதர் சங்கம்``பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைச் சொன்ன எஸ்.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கிய விஷயத்தில் கவர்ன்மென்ட் ஆர்டரிலேயே பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் இருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள் மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஏன் சொல்லவில்லை? கவர்ன்மென்ட் ஆர்டரில் க்ரைம் நம்பர் இருந்தாலே போதும். இன்றைக்கு இருக்கிற டெக்னாலஜி வளர்ச்சியில், எப்.ஐ.ஆர் நம்பரைப் போட்டால் இணையத்தில் அது தொடர்பான தகவல்கள் கிடைத்துவிடும். தவிர, கவர்ன்மென்ட் ஆர்டர், எப்.ஐ.ஆர். இரண்டுமே பப்ளிக் டொமைனுக்கு வந்துவிட்டது. அதனால், பப்ளிக் டொமைனுக்கு வரக்கூடிய எந்த டாக்குமென்டிலும் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றத்தில் கேட்கப் போகிறோம்'' என்றவரிடம், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கும்பட்சத்தில் அவர்களின் பாதுகாப்புக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்றோம்.

"பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நாங்கள் தலையிட்டுவிட்டாலே பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பும் எங்கள் பொறுப்பில் வந்து விடுகிறது. இந்தப் பாதுகாப்பு விஷயத்தை சில என்.ஜி.ஓ.க்களும் செய்துகொண்டு வருகின்றன. நாங்கள் இப்படிப் பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாப்பது என்பது சொந்த விருப்பத்தால் செய்கிறோம். ஆனால், இதுவொரு மாநில அரசின் வேலை. போக்சோ சட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நலம், மனநலம், காவல்துறையினருடன் பேசுவது என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் செய்கிற பொறுப்பைக் குழந்தைகள் நலக் குழுமமே பார்த்துக்கொள்ளும். இப்படிப் புதிதாக வருகிற ஒன்றிரண்டு சட்டங்களில் மட்டுமே இப்படிப் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்புக்கான அம்சங்களும் சேர்ந்தே வருகின்றன. மற்றபடி, பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்க இந்தியாவில் எந்தச் சட்டமும் இல்லை என்பதுதான் பரிதாபம்'' என்று வருத்தப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாப்பது மாநில அரசின் கடமை

"பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, சம்பவம் நடந்தபோது அணிந்திருந்த ஆடையைக் கொண்டு வந்து புகார் கொடுப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, அந்த இடத்திலிருந்து தப்பிக்கத்தான் தோன்றும். உடனடியாக புகார் கொடுக்க வேண்டும் என்று தோன்றாமல் போகலாம். உங்களுக்குக் கொடுமை இழைத்த ஆணைக் காவல்துறை கைது செய்யும்போது, அவனுடைய குற்றத்தை நிரூபிக்க, சம்பவம் நடந்தபோது நீங்கள் அணிந்திருந்த ஆடை உதவும். அதனால், அதைத் பத்திரமாக வைத்திருந்து புகார் அளிக்கச் செல்லும்போது உடன் அதையும் கொண்டு செல்லுங்கள்.  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எங்களுடைய துணை எப்போதுமே உண்டு'' என்று முடித்தார் உ.வாசுகி.


டிரெண்டிங் @ விகடன்