"பா.ஜ.க-வோடு எந்தக் கட்சிதான் கூட்டணி வைக்கல!"- தம்பிதுரை | Lok sabha election 2019 - Thambidurai Explanation on BJP Alliance

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (19/03/2019)

கடைசி தொடர்பு:12:12 (25/03/2019)

"பா.ஜ.க-வோடு எந்தக் கட்சிதான் கூட்டணி வைக்கல!"- தம்பிதுரை

"நாங்கள், இப்போது பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்துள்ளதை சிலர் விமர்சிக்கிறார்கள். எங்களை விமர்சிக்கும் தி.மு.க-வே ஒருகாலத்தில் பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்தது. ஜெயலலிதாவும் பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்தார்" என்று தம்பிதுரை தெரிவித்தார்.

தம்பிதுரை

ஏப்ரல் 18-ம் தேதி, மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. அதற்காக, அத்தனை கட்சிகளும் பம்பரம்போல் பரபரப்பாக தேர்தல் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அ.தி.மு.க சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக மறுபடியும் மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இருந்த அவர், நேற்று இரவு கரூருக்கு வருகைதந்தார். அவருக்கு, அ.தி.மு.க சார்பில் தடபுடலான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இன்று காலை முதல் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துவருகிறார். தொடர்ந்து, நாளை காலையில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளோடு கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகளுக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை,  "கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாளை காலை தொடங்க உள்ளது. கட்சியின் காரியாலயம் நாளை தொடங்கப்பட உள்ளது. தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்து, செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஜெயலலிதா தலைமையில் 98-ம் ஆண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தோம். இப்போது, இந்தக் கூட்டணியை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால், கடந்த 1999-ம் ஆண்டில் பா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி வைத்தது. 2004-ல் மீண்டும் பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்தது. தொடர்ந்து 2009 ல் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்தது. 2014-ல் அ.தி.மு.க தனித்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் இரண்டு முனைப் போட்டி என்ற அடிப்படையில், இரண்டு கூட்டணி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளதால், பா.ஜ.க, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க, புரட்சி பாரதம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் அமைத்த கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும். மக்கள் இந்த கூட்டணிக்கு வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்" என்றார்.