ஊட்டி மாரியம்மன் கோயில் உபயதாரர்கள் தேர்பவனி | ooty mariamman temple fest

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (19/03/2019)

கடைசி தொடர்பு:17:50 (19/03/2019)

ஊட்டி மாரியம்மன் கோயில் உபயதாரர்கள் தேர்பவனி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக ஊட்டி மாரியம்மன் கோயில் விளங்கிவருகிறது.

ஊட்டி மாரியம்மன் கோயில்

நீலகிரி மாவட்டத்தின் காவல் தெய்வங்கள் வாழும் கோயிலாக ஊட்டி மாரியம்மன் கருதப்படுகிறது, ஒரே கருவறைக்குள் மாரியம்மன், காளியம்மன் ஆகிய இரு தெய்வங்கள் குடிகொண்டுள்ள ஆலயமான இதில், 36 நாள்கள் பிரம்மோற்சவம் நடக்கும் அபூர்வ ஆலயமாகத் திகழ்கிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், கோயில் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. ஒரு மாதம் நடக்கும் இத்திருவிழாவின்போது, பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் தங்களது பாரம்பர்ய முறைப்படி அம்மனுக்கு அலங்காரம்செய்து தேர்பவனி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த 15-ம் தேதி கணபதி ஹோமம், பூச்சொரிதல், நவகலச பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் விழா  தொடங்கியது. 17-ம் தேதி கணபதி ஹோமம், காப்புக் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. 

இந்நிலையில், உபயதாரர்கள் சார்பில் பல்வேறு அலங்காரங்களில் தேர் பவனி  தொடங்கியுள்ளது. புலி வாகனத்தில் ஆதிபராசக்தி அலங்காரத்தில் அம்மன் தேர் பவனியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு  அம்மனை தரிசனம்செய்தனர். இதில்,  வாத்தியக் குழுவினர்  மேல்கோட்ட பகுதியிலிருந்தும் டோலுகுணிதா என்ற ஆட்டக் கலைஞர்கள் பாண்டுபுரா பகுதியில் இருந்தும், டாலிகுணிதா மண்டியா பகுதி கலைஞர்களாலும் மிக சிறப்பான ஆட்டமாக, அனைவரையும் கவரும் ஆட்டமாக இருந்தது. இதேபோல, ஒவ்வொரு நாளும் துர்க்கை, ராஜராஜேஷ்வரி, ஹெத்தையம்மன், அங்காளம்மன், பகவதி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில், அடுத்த மாதம் 15-ம் தேதி வரை தேர் பவனி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அடுத்த மாதம் 16-ம் தேதி திருத்தேர் விழா நடைபெற உள்ளது.