‘வேலூர் மக்களுக்கு என் மகனைத் தத்துக்கொடுக்கிறேன்!’ -துரைமுருகன் உருக்கம் | I give my son to the people of Vellore - Durai Murugan

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (19/03/2019)

கடைசி தொடர்பு:12:12 (25/03/2019)

‘வேலூர் மக்களுக்கு என் மகனைத் தத்துக்கொடுக்கிறேன்!’ -துரைமுருகன் உருக்கம்

'வேலூர் தொகுதி மக்களுக்கு என் மகனை தத்துக்கொடுக்கிறேன். இனி அவர், உங்கள் வீட்டுப் பிள்ளை' என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் உருக்கமாகப் பேசினார்.

கதிர் ஆனந்த்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடியில், தி.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. தி.மு.க பொருளாளர் துரைமுருகன், தன் மகனை வேட்பாளராக அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய துரைமுருகன், ‘‘என் மகன் அமெரிக்காவில் படித்தவர். அங்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் தருவதாகக் கூறினார்கள். அதையெல்லாம் வேண்டாமென்று கூறிவிட்டு தமிழகத்துக்கு வந்துவிட்டார்.

கதிர்ஆனந்த், அரசியலுக்குப் புதியவரல்ல. கலைஞர் தூக்கிவளர்த்த பிள்ளை. என்னைப் பார்த்து, அவருக்கு ஓட்டு போடுங்கள். வாணியம்பாடி, குடியாத்தம் பகுதியில் தொழிற்பேட்டை அமைத்துக்கொடுக்கிறோம். என் மகனை, தொகுதி மக்களுக்கு தத்துக் கொடுக்கிறேன். இனி அவர், உங்கள் வீட்டுப் பிள்ளை’’ என்று உருக்கமாகப் பேசினார்.

துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்துக்கு 44 வயதாகிறது. அமெரிக்காவில் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார். காட்பாடியில், கல்வி நிறுவனங்களை நடத்திவருகிறார். கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு செந்தாமரை, இலக்கியா என்ற 2 மகள்கள், இளவரன் என்ற ஒரு மகன் உள்ளனர்.