பணம் பறிமுதலில் நம்பர் ஒன் மாவட்டம்!- ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தியையும் விட்டுவைக்காத நீலகிரி கலெக்டர்! | election vehicle checkup in nilgiris to be strengthened

வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (19/03/2019)

கடைசி தொடர்பு:09:32 (21/03/2019)

பணம் பறிமுதலில் நம்பர் ஒன் மாவட்டம்!- ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தியையும் விட்டுவைக்காத நீலகிரி கலெக்டர்!

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினரால் அதிக ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட மாவட்டங்கள் வரிசையில் நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை நீலகிரி மாவட்டத்தில் 1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யும் நோக்கில் பணப் பரிமாற்றம் நடைபெறுவதைத் தவிர்க்க தேர்தல் பறக்கும் படையினர் நீலகிரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி உள்ளிட்ட வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தமிழகத்தில் இன்று தொடங்கியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அரசியல் கட்சி நிர்வாகிகளால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டம் கேரள, கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. மூன்று மாநில வாகனங்களும் வந்து செல்கின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் வாகனங்கள் வீடியோ பதிவுகளுடன் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் அல்லது பத்தாயிரத்திற்கும் அதிகமாக மதிப்புள்ள பரிசுப் பாெருள்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக தேர்தல் பறக்கும் படையினர் மூலம் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இன்றுவரை ரூ.1,41,92,320  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.16,80,510 உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியாக உள்ள நீலகிரி மாவட்டத்தில் வாகன சாேதனை மேலும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான இன்னசென்ட் திவ்யா, ``108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் அமரர் ஊர்திகளிலும்கூட வாகன சாேதனை மேற்கொள்ளப்படும்'' என்றார்.