`ஆடு, மாடு வியாபாரிகளைத் தொந்தரவு செய்யாதீங்க!- தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை வைத்த கட்சி | Election Officers Don't Disturb General public Cuddalore Bjp Request to EC

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (19/03/2019)

கடைசி தொடர்பு:12:15 (25/03/2019)

`ஆடு, மாடு வியாபாரிகளைத் தொந்தரவு செய்யாதீங்க!- தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை வைத்த கட்சி

ஆடு, மாடு வியாபாரிகள் கொண்டு செல்லும் ஓரிரு லட்சம் பணத்தைக் கணக்கில் வராத பணம் எனக் கைப்பற்றி தொந்தரவு செய்ய வேண்டாம் என பாரதிய ஜனதா கட்சி மாநிலப் பிரசார அணிச் செயலாளர் ராஜரத்தினம், தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். 

ராஜரத்தினம்

``நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில நாள்களாக ஆடு, மாடு வியாபாரிகள் தங்கள் கைகளில் கொண்டுசெல்லும் ஒரு லட்சம் அல்லது 2 லட்சம் பணத்தை தேர்தல் ஆணையம் கைப்பற்றி வருவதாகச் செய்தி வருவது வருத்தமாக உள்ளது. ஒரு ஆட்டின் விலை 20,000, மாட்டின் விலை 50,000 என்று உள்ள நிலையில் 10 ஆடு, மாடுகளை விற்றாலே சில லட்சம் வந்துவிடுகிறது. கடந்த ஆர்.கே.நகர்த் தேர்தலில் இந்தியாவிலேயே அதிகமாக வாக்காளருக்குப் பணப் பட்டுவாடா நடந்ததாகக் கூறி தேர்தலைத் தள்ளி வைத்து பிறகு தேர்தல் நடைபெற்றது. ஆனால், யார் பணம் பட்டுவாடா செய்தார்கள், பணம் யாருடையது, கைப்பற்றப்பட்ட பணம் சட்டத்திற்குப் புறம்பானதா என்பன பற்றி இதுவரை தேர்தல் ஆணையம் வெளிப்படுத்தவில்லை.

ஆனால், எல்லாத் தேர்தல்களிலும் சாதாரண வியாபாரிகளைத் தொல்லை செய்வது வாடிக்கையாக உள்ளது. ஆடு, மாடுகளை விற்று வாங்க டிஜிட்டல் பணபரிவர்த்தனை, செக் பணபரிவர்த்தனை என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமா என்பதைத் தேர்தல் ஆணையம் உணரவேண்டும். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் அந்த வியாபாரியின் நிரந்தர முகவரியை காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தால் உண்மை தெரிந்துவிடப்போகிறது. அதை விடுத்து நடைமுறை சாத்தியம் இல்லாத சட்டங்களைச் செயல்படுத்தி ஏழைகள் சிறு பிழைப்பு நடத்துபவர்களைத் தொந்தரவு செய்யவேண்டாம் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.