``பெண்கள் ஆணையமே பேட்டி கொடுப்பதற்குத்தானா?"- பொள்ளாச்சி விவகாரத்தில் பாலபாரதி கேள்வி! | Ex mla balabharthi talk about pollachi issues

வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (19/03/2019)

கடைசி தொடர்பு:20:05 (19/03/2019)

``பெண்கள் ஆணையமே பேட்டி கொடுப்பதற்குத்தானா?"- பொள்ளாச்சி விவகாரத்தில் பாலபாரதி கேள்வி!

``என்னைப் பொறுத்தவரை பெண்கள் ஆணையமே பேட்டி கொடுக்கத்தான் என்றாகி விட்டது. இதில், அவர்கள் பெண்களின் ஒழுக்கத்தைப் பற்றியெல்லாம் விமர்சனம் செய்வதைப் பார்த்தால் பழைமை வாதக் கண்ணோட்டம் இன்னும் தொடர்கிறது என்பதே உறுதியாகிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி கூறியுள்ளார்.

பாலபாரதி

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றங்களைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்த வண்ணமிருக்கின்றன. நேற்று திண்டுக்கல் நகரில், 20 க்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்புகள் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர். 300 -க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதியிடம் பேசினேன்.

``கல்லூரி மாணவிகள் மற்றும் நடுத்தரப் பெண்களிடமும் இந்தப் பொள்ளாச்சி குற்றங்கள் கடும்கோபத்தைத் தந்திருக்கிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என உறுதியோடு நேற்றைய மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் இளம்பெண்கள் முழங்கினார்கள். இந்த விஷயத்தில் மதங்கள், கட்சிகள் கடந்து அனைவரும் கலந்துகொண்டார்கள். ஆனால், தமிழக அரசாங்கமோ இந்தப் பிரச்னைக்கான நடவடிக்கைகளைக் கண் துடைப்பு நாடகமாகவே செய்கிறது. ஆரம்பத்தில் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. பின், சிபிசிஐடி எனச் சொன்னது. பிறகு, பிரச்னை பூதாகரமாக மாறிவிட்டதை உணர்ந்ததும் சிபிஐ விசாரணையைக் கோரியிருக்கிறது. அதுவும் தேர்தல் காலம் என்பதால்தான் இத்தனை விரைவு என்றும் தோன்றுகிறது. தமிழக அரசு பொள்ளாச்சி குற்றத்தில் முழு ஆர்வத்துடன் இல்லாமல், கண் துடைப்பாகவே செயல்படுகிறது. இது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களைக் காப்பற்றதானோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுவது இயல்புதானே. அ.தி.மு.கவிலிருந்து பார் நாகராஜ் நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் முழு விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்பதெல்லாம் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. 

தமிழக அரசுதான் அப்படி என்றால், அந்த மாவட்ட எஸ்.பி, இந்தக் குற்றத்தில் அரசியல் கட்சிகளுக்குத் தொடர்பில்லை என்று விசாரணை தொடங்காத நிலையிலேயே சொல்கிறார். இது எவ்வளவு பெரிய கொடுமை. மகளிர் ஆணையம் அமைத்ததும் நம்பிக்கை வந்தது. 2007-ம் ஆண்டுதான் கருணாநிதி ஆட்சியில் மகளிர் ஆணையம், அதிகாரபூர்வமாகச் செயல்பட வேண்டும் என, சட்ட அந்தஸ்து கொடுக்கப்பட்டது. ஆனால், அதன் அதிகாரம் என்னென்ன என்பதையும் வரையறுக்கவில்லை. அதனால், பெண்கள் ஆணையம் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நபர்களைப் பார்க்கிறது. பேட்டி கொடுக்கிறது. என்னைப் பொறுத்தவரை பெண்கள் ஆணையமே பேட்டி கொடுக்கத்தான் என்றாகி விட்டது. இதில், அவர்கள் பெண்களின் ஒழுக்கத்தைப் பற்றியெல்லாம் விமர்சனம் செய்வதைப் பார்த்தால் பழைமை வாதக் கண்ணோட்டம் இன்னும் தொடர்கிறது என்பதே உறுதியாகிறது. 

பொள்ளாச்சி குற்றத்திற்கு எதிராக, எல்லோரும் தொடர்ந்து குரல் கொடுக்கும்பட்சத்தில்தான் உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும் கிடைக்கும்" என்கிறார்.