`இரண்டாம் திருமணம் செய்வதாக கூறினார்; ஏமாற்றிவிட்டார்' - காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்! | women complaint against lover in ramanathapuram

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (19/03/2019)

கடைசி தொடர்பு:21:45 (19/03/2019)

`இரண்டாம் திருமணம் செய்வதாக கூறினார்; ஏமாற்றிவிட்டார்' - காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

 திருமணம் செய்வதாகக் கூறி ஒன்றாக வாழ்ந்துவிட்டு, பின்னர் ஏமாற்றிய நபர்மீது ராமநாதபுரம் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்


 ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி.கருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர், கலீதா யாஸ்மின். இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த கலீதா, திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதையடுத்து கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்த போலீஸார் அப்பெண்ணை தடுத்துக் காப்பாற்றினர். இதனைத் தொடர்ந்து, பெண் காவலர்கள் உதவியுடன் கலீதா யாஸ்மினிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

''சதாம் உசேன் என்பவர் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய நிலையில், நானும் அவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். ஏற்கெனவே திருமணமாகி முறையாக விவாகரத்து பெற்ற நிலையில், என்னை இரண்டாம் திருமணம் செய்துகொள்வதாக கூறிப் பழகிய சதாம் உசேன், பின்னர் என்னைத் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார்  கொடுக்கச் சென்ற என்னை அடித்துத் துன்புறுத்துகிறார். எனக்கு ஆதரவாக இருந்தவர்களையும் தாக்கியுள்ளார். என்னை ஏமாற்றியதுடன் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவருகிறார்'' என போலீஸாரிடம் விசாரணையின்போது கலீதா யாஸ்மின் கூறியுள்ளார்.

ராமநாதபுரம்


 இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இச்சம்பவம் நடந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.