நாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல் | tommorrow nirmaladevi release from jail: advocate pasumponpandiyan

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (19/03/2019)

கடைசி தொடர்பு:21:06 (19/03/2019)

நாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்

நிர்மலாதேவி

நிர்மலாதேவியின் சகோதரர் ரவி, ஜாமீன் பத்திரம் வழங்கியதைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் இருந்து நாளை விடுதலையாகிறார் என அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார்.

நிர்மலா தேவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தனியார் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலாதேவி கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கடந்த 12-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது. அப்போது, ரத்த உறவில் ஒருவரும், குடும்ப நண்பர் ஒருவரும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்களை ஜாமீனுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் யாரும் ஜாமீன்தாரர்களாக வராத காரணத்தால் அவரால் வெளியே வர முடியவில்லை.

இந்நிலையில், நிர்மலாதேவிக்கு அவரது சகோதரர் ரவி, குடும்ப நண்பர் மாயாண்டி ஆகியோர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நீதித்துறை நடுவர் மும்தாஜ் முன் ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்தனர். அதனை அவர் ஏற்றுக்கொண்டதையடுத்து, விருதுநகர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனவே, நாளை அவர் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார்.

வழக்கறிஞர்

இதுகுறித்து அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது;  நிர்மலாதேவியின் சகோதரர் ரவி ஜாமீன் பத்திரம் வழங்கியதையடுத்து, கடந்த 11 மாதமாக சிறையில் உள்ள நிர்மலாதேவி, நாளை மாலை ஜாமீனில் விடுதலையாகி வெளியே வருகிறார். நிர்மலாதேவி விவகாரத்தில் சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழுவை ஆளுநர் அமைத்தார். ஆனால், தற்போது பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அவர் மெளனமாக இருப்பது ஏன்? ஊடகங்களிடம் பேசக் கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிர்மலாதேவிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.