`தேர்வு முடிந்த சந்தோஷத்தில் விளையாட்டு' - கடலில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு! | 4 Students died in Cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (19/03/2019)

கடைசி தொடர்பு:22:30 (19/03/2019)

`தேர்வு முடிந்த சந்தோஷத்தில் விளையாட்டு' - கடலில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு!

கடலூர்  தேவனாம்பட்டினம் கடலில் மூழ்கி, 12 -ம் வகுப்பு மாணவர்கள்  4 பேர்  உயிரிழந்தனர். ஒரு மாணவர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். 

மாணவர்கள்

கடலூர் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கடலூர் முதுநகர் ஆனந்த் மகன் தனுஷ்வர் (17), புவனகிரி கந்தப்பன் மகன் விக்னேஷ் (17) ( இவர் தற்சமயம் கடலூர் செல்லங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்துவந்தார்), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமோட்டன் தெரு பிரபாகரன் மகன் ஸ்ரீஹரி (17), திருப்பாதிரிப்புலியூர் சேகர் மகன் பரணிகுமார் (17), பொத்தாங்குப்பம், வள்ளலார் நகர், சிங்கபுரி தேவராஜ் மகன் அபினேஷ் (17) இவர்கள் 5 பேரும் இன்று 12- ம் வகுப்பு  இறுதித் தேர்வு  எழுதி முடித்துவிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்குச் சென்றுள்ளனர். பின்னர், 5 பேரும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். இதில், 5 மாணவர்களும் அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இதில் தனுஷ்வர், விக்னேஷ், ஸ்ரீஹரி, பரணிகுமார் உள்ளிட்ட 4 பேரும் உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின. இவர்களில் ஆபத்தான நிலையில்  உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அபினேஷை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தேவனாம்பட்டினம் போலீஸார், 4 மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர். இறுதித் தேர்வு எழுதிவிட்டு நண்பர்களுடன் கடலில் குளித்து மகிழ்ந்த மாணவர்கள் உயிரிழந்த சம்பவம், கடலூரில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.