`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி! | Republican Party of India made alliance with makkal needhi maiam

வெளியிடப்பட்ட நேரம்: 20:59 (19/03/2019)

கடைசி தொடர்பு:12:16 (25/03/2019)

`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி!

மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி வைத்துள்ளது.

கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க -  தி.மு.க இரண்டு கட்சிகளும் தனித்தனியாகக் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை, தனித்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வும் பிரதான கட்சிகளாக அரசியல் களத்தில் உள்ளன. டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள்  முதன்முதலாகத் தேர்தலை சந்திக்க உள்ளன. முதலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டி எனக் கூறப்பட்டது. 

இந்நிலையில் திடீர் திருப்பமாக, மக்கள் நீதி மய்யத்துடன் முன்னாள் எம்.எல்.ஏ செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி உடன்பாடு செய்துள்ளது. இன்று மாலை, இரு கட்சிகளுக்கிடையே உடன்பாடு செய்யப்பட்டது. அதன்படி, மக்களவைத் தேர்தலில் 1 தொகுதி, இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் இந்திய குடியரசுக் கட்சி போட்டியிட உள்ளது. இந்தத் தொகுதிகளில், மக்கள் நீதி மயத்தின் டார்ச் லைட் சின்னத்திலேயே இந்திய குடியரசுக் கட்சி போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கமல்ஹாசன்

கூட்டணி உடன்பாட்டுக்குப் பின் ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன், தமிழரசன் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய செ.கு.தமிழரசன், ``தமிழகத்தில் மாற்று அரசியலுக்கு மாற்றுக் கட்சியாக மக்கள் நீதி மய்யத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அ.தி.மு.க-விற்கு மாற்று தி.மு.க, பா.ஜ.க-வை எதிர்க்க தி.மு.க-வால்தான் முடியும் என்ற மாயப் பிம்பத்தை உடைத்து, மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக இயங்கும் மக்கள் நீதி மய்யம் தான் மாற்றத்திற்குச் சரியான கட்சி.  அ.தி.மு.க - பா.ஜ.க-வுடன் கூட்டு வைத்திருப்பதை நாங்கள் ஏற்கவில்லை. இதனால், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். தி.மு.க என்பது சந்தர்ப்பவாத கட்சியாக இருக்கிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க