``வாட்ஸ்அப் டி.பி ஜெயலலிதா... மரணத்தின் காரணம்!’’ - கெளதமி ஷேரிங்ஸ் | gautami Speaks about current political situation

வெளியிடப்பட்ட நேரம்: 08:52 (20/03/2019)

கடைசி தொடர்பு:09:15 (20/03/2019)

``வாட்ஸ்அப் டி.பி ஜெயலலிதா... மரணத்தின் காரணம்!’’ - கெளதமி ஷேரிங்ஸ்

``ஆளுமையுடன் வாழ்ந்த ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படலை. அதனால் எனக்கு அதிக வருத்தமும் சந்தேகமும் உண்டு. எனக்கு மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்களுக்கும் அந்தச் சந்தேகம் இருக்கு. அதற்கான விடை தெரிந்தே ஆகணும்.’’

``வாட்ஸ்அப் டி.பி ஜெயலலிதா... மரணத்தின் காரணம்!’’ - கெளதமி ஷேரிங்ஸ்

டந்த சில ஆண்டுகளாக, சமூக நிகழ்வுகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாகப் பேசிவருகிறார் நடிகை கெளதமி. தற்போதைய அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பேச அவரைச் சந்தித்தோம்.

``பொள்ளாச்சி சம்பவம் பற்றி உங்கள் கருத்து...’’

``மனிதர்களால் இத்தகைய செயல்களை எப்படிச் செய்ய முடியும்னு அதிர்ச்சியா இருக்கு. இந்தச் சம்பவம், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வாழ்நாள் முழுக்க பாதிக்கலாம். அந்த வலிதான் மிகக்கொடியது. ஆனா, இத்துடன் வாழ்க்கை முடிஞ்சுப்போயிடாது. இது கடந்துபோகக்கூடிய ஒரு விஷயம்தான். பாதிக்கப்பட்ட பெண்கள் நம்பிக்கையுடன் மீண்டு வரணும். தங்கள் வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தணும். அதேசமயம் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படணும். அது பலருக்கும் பாடமாக இருக்கணும்.’’

கெளதமி

``சமூகக் குற்றங்கள் பலவற்றுக்கும் சினிமா முக்கிய காரணமா இருக்கிங்கிற கூற்றை எப்படிப் பார்க்கிறீங்க?’’

``சமூகத்தில் நடக்கிற விஷயங்களைத்தான் சினிமாவில் காட்டுறாங்க. அதேசமயம் சினிமாவை கோடிக்கணக்கானோர் ரசிக்கிறாங்க. அப்போ சினிமா துறையினருக்கும் பொறுப்பு இருக்கு. சமூகத்தில் நடக்கிற குற்றச் சம்பவங்கள் பலவற்றுக்கும் சினிமா ஒருவகையில் காரணமா இருக்குது. அதை ஏத்துக்கிறேன். ஆனால், சினிமாதான் தூண்டுகோல் என்பதை நான் ஏத்துக்க மாட்டேன். சினிமாவில் நிறைய நல்ல விஷயங்களையும் சொல்றாங்க. அதைப் பார்த்து பயனடைந்தவங்களும் இருக்காங்க. அதையும் வெளிப்படையா சொல்லலாமே!’’

``பி.ஜே.பி-யில் நீங்க இணைந்ததன் காரணம் மற்றும் தற்போது அரசியலில் பெரிதாக ஆர்வம் செலுத்தாமல் இருப்பது ஏன்?’’

``வாஜ்பாய் அவர்களின் தலைமையில் பி.ஜே.பி செயல்பட்டபோது, அவர் இந்த நாட்டுக்குச் சிறந்த தலைவர்னு நினைச்சேன். அதனால் அவர் முன்னிலையில் பி.ஜே.பி-யில் இணைந்தேன். அப்போ பி.ஜே.பி-க்கு ஆதரவாகத் தமிழகத்தில் தேர்தல் பிரசாரமும் செய்தேன். நான் இப்போவரை பி.ஜே.பி-யில் உறுப்பினராக இருக்கேன். ஆனால், அரசியல் என் முழுநேர கரியர் கிடையாது. மற்ற பல பணிகளில் தீவிரமாகக் கவனம் செலுத்துறேன். அதுக்கே நேரம் சரியா இருக்கு. அதனால்தான் முழுநேர அரசியலில் ஈடுபடலை.’’ 

கெளதமி

``2016-ம் ஆண்டு பிரதமர் மோடியைச் சந்தித்தது ஏன்? அவரின் ஆட்சித்திறன் குறித்து உங்கள் கருத்து?’’

``அப்போது `லைஃப் எகெயின் ஃபவுண்டேஷன்’ வேலைகளில் தீவிரம் காட்ட ஆரம்பிச்சேன். பிரதமரும் சமூகச் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டக்கூடியவர். எனவே, என் ஃபவுண்டேஷன் பணிகள் குறித்துப் பேசவும் மேற்கொண்டு நல்ல யோசனைகளைப் பெறவும் பிரதமரைச் சந்தித்சேன். ஆனால், அரசியல் குறித்து அப்போ பேசலை. பிரதமரா மோடி நல்ல முறையில் செயல்பட்டிருக்கிறார். ஆனா, மத்திய பி.ஜே.பி அரசு செய்த பல நல்ல திட்டங்கள் மக்கள் மத்தியில் சரியாக எடுத்துக் கூறப்படலை. அது மக்களுக்க முழுமையாகத் தெரிந்தால், பி.ஜே.பி-யின் பலம் இன்னும் கூடும்.’’

``தற்போது அ.தி.மு.க தலைமையில் ஏற்பட்டுள்ள தேர்தல் கூட்டணி குறித்து உங்கள் கருத்து?’’

``அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது; எதிரியும் கிடையாது. இக்கூட்டணி, பல காரணங்களை முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. அது குறித்துக் கருத்துச் சொல்ல எனக்கு விருப்பமில்லை.’’

கெளதமி

``தற்போதைய தமிழக அரசியல் மாற்றங்களை எப்படிப் பார்க்கிறீங்க?’’

``ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கு. ஆனா, அதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்து மாறுபட்ட கருத்துகள் வருகின்றன. ஆனா, ஓர் அரசின் ஆட்சி முடிவடையும் தருவாயில்தான் அவர்களின் ஆட்சித்திறனை மதிப்பிடணும் என்பது என் கருத்து. அதனால், தற்போதைய ஆட்சி முடிவடையும்போது என் கருத்தை வெளிப்படையா சொல்றேன். ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியையும் மாறி மாறி குற்றம் சாட்டிகிட்டே இருக்காங்க. ஆனா, மக்களை யாருமே பெரிசா கண்டுக்கலைனு எனக்கு வருத்தம் இருக்கு.’’

``உங்க வாட்ஸ்அப் டி.பி-யாக ஜெயலலிதாவின் படத்தை வைத்திருப்பது ஏன்?’’

``அரசியல் தலைவராகவும் சவால்களைக் கடந்து சாதித்த பெண்ணாகவும் ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்கும். ஆளுமையுடன் வாழ்ந்த அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படலை. அதனால் எனக்கு அதிக வருத்தமும் சந்தேகமும் உண்டு. எனக்கு மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்களுக்கும் அந்தச் சந்தேகம் இருக்கு. அதற்கான விடை தெரிந்தே ஆகணும். அதனாலும், ஜெயலலிதாவின் நினைவாகவும்தான் அவர் போட்டோவை வைத்திருக்கிறேன்.’’  


டிரெண்டிங் @ விகடன்