``பொள்ளாச்சி மக்கள் என்னை அறிவார்கள்; இலைக்கே வாக்களிப்பார்கள்!" - பொள்ளாச்சி ஜெயராமன் | Pollachi jayaraman press meet at airport

வெளியிடப்பட்ட நேரம்: 07:16 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:17 (25/03/2019)

``பொள்ளாச்சி மக்கள் என்னை அறிவார்கள்; இலைக்கே வாக்களிப்பார்கள்!" - பொள்ளாச்சி ஜெயராமன்

 பொள்ளாச்சி ஜெயராமன்

``என்னை பொள்ளாச்சி மக்கள் அறிவார்கள். பொள்ளாச்சி விவகாரத்தில் அ.தி.மு.க மீது  அபாண்டமான பழி சுமத்தினார்கள் என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது. நிச்சயமாக இதன் மூலம் மக்கள் கூடுதலாக எங்களுக்கு வாக்களிப்பார்கள்" என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், ``என் மீதும், என்  குடும்பத்தார் மீதும் குற்றச்சாட்டு சொல்பவர்களிடம் அதற்கான ஆதாரம் என்ன  இருக்கின்றது என்று ஏன் ஊடகங்கள் கேட்கவில்லை? அ.தி.மு.க-வினர் இதுபோன்ற தவறுகளை எப்போதும் செய்ய மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோமே தவிர,  எங்களால் யாரும் எந்த  பாதிப்புக்கும் உள்ளாகமாட்டார்கள்.

என் மகன்கள்  வெளிநாடு தப்பிவிட்டதாக வதந்தி கிளப்புகின்றனர். அவர்கள் எப்போதும்போல் அவர்கள் பணியை செய்துவருகின்றார்கள். இனியும்  ஆதாரமில்லாமல் என் குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகளை யாரும் முன்வைக்க வேண்டாம். இந்தத் தகவல் பொய் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். நான் அரைக்கால் சட்டைப் போட்டு திரிந்ததில் இருந்து என்னை பொள்ளாச்சி மக்கள் அறிவார்கள். அ.தி.மு.க மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பழி என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது. நிச்சயமாக இதன் மூலம் மக்கள் கூடுதலாக எங்களுக்கு  வாக்களிப்பார்கள்.

சபரீசன் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து போலீஸார் என்னிடம் விசாரித்தார்கள். என்னிடம் இருந்த ஆதாரங்கள், ஆவணங்களை போலீஸாரிடம் கொடுத்துள்ளேன். தி.மு.க- தொண்டர்கள் யாரேனும் செய்யும் தவறுக்கு ஸ்டாலின் பொறுப்பாவரா? ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் அ.தி.மு.க கட்சியில் ஒரு தொண்டர் செய்யும் தவற்றை கண்காணிப்பது கடினம் என்றவர், அ.தி.மு.க தேர்தல் அறிக்கை பல்வேறு திட்டங்களை  அடிப்படையாகக் கொண்டு சிறப்பான தேர்தல் அறிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க