போலி கையெழுத்து மூலம் பணியில் சேர முயற்சி - அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உட்பட மூவர் கைது | Three people arrested, including Minister's Assistant

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (20/03/2019)

கடைசி தொடர்பு:09:40 (20/03/2019)

போலி கையெழுத்து மூலம் பணியில் சேர முயற்சி - அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உட்பட மூவர் கைது

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், போலி கையெழுத்திட்டு மருந்தாளுநர் பணியில் சேர முயன்ற விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உட்பட மூன்று பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அமைச்சர் விஜய பாஸ்கருடன் விக்னேஷ்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிலாவிடுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தான் படித்த சான்றிதழ்களுடன், மருந்தாளுநர் பணிக்கான அரசாணையையும் எடுத்துக்கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் சென்று, மருத்துவமனையில் மருந்தாளுநராக நான் பணிபுரிவதற்கான பணி நியமன அரசாணை என்னிடம் உள்ளது. எனக்கு அந்த வேலையை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். உடனே, அதை வாங்கிப்பார்த்த முதல்வர், அதில் தன்னுடைய கையெழுத்து போலியாக போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, முதல்வர் மற்றும் மருத்துவர்கள் சேர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் கார்த்திகேயனை மடக்கிய போலீஸார் தீவிர விசாரணை செய்ததில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்களில் ஒருவரான விக்னேஷ் உட்படப் பலருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்தது.
 

கறம்பக்குடி அருகே நரங்கியப்பட்டைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், அமைச்சரின்  உதவியாளர் எனக்கு நெருக்கம் அவரிடம் சொல்லி உனக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநர் பணி வாங்கித்தருகிறேன். அதற்கு ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் பேச்சை நம்பிய நான் ரூ.2 லட்சத்தை சுகாதாரத்துறை அமைச்சரின் உதவியாளர்களில் ஒருவரான மச்சுவாடியைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்னேஷ்வரனிடம் கொடுத்தேன்.

அமைச்சரின் உதவியாளர்

ஆனால், இப்படி ஆகிவிட்டது என்று போலீஸாரிடம் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், புதுக்கோட்டை சுகாதாரத்துறை அமைச்சரின் உதவியாளர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மாவட்ட காவல்துறை உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது புதுக்கோட்டை மக்களின் கோரிக்கையாக உள்ளது.