``தந்தை பாலியல் தொல்லை கொடுக்கிறார்” - புதுக்கோட்டையில் கணவருடன் வந்து புகார் அளித்த இளம்பெண் | sexually harassment complaint against father

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (20/03/2019)

கடைசி தொடர்பு:10:50 (20/03/2019)

``தந்தை பாலியல் தொல்லை கொடுக்கிறார்” - புதுக்கோட்டையில் கணவருடன் வந்து புகார் அளித்த இளம்பெண்

புதுக்கோட்டை அருகே பெற்ற தந்தையே தனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுப்பதாகக் கூறி கண்ணீருடன் இளம்பெண் ஒருவர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகார் அளித்த இளம்பெண்

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குக் கையில் மனுவுடன் இளம்பெண் ஒருவர், கணவருடன் வந்திருந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அந்தப் பெண் அளித்த புகார் மனுவில்,  `என் தந்தை பாண்டிமுத்துவும், என் தாயாரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நான் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். எனக்கு முன்பு இரண்டு அக்காக்கள் உள்ளனர். அக்காக்களுக்குத் திருமணம் ஆகி வெளியூரில் வாழ்ந்து வருகிறார்கள். நான் தந்தையுடன் வசித்து வந்தேன். அப்பா நடத்தையில் சந்தேகம் வரவே, என்னை மூத்த அக்கா சென்னைக்குக் கூட்டிச்சென்றார்.

அங்கு வீட்டுவேலை பார்த்து வந்தேன். தற்போது, கோயில் திருவிழா வந்ததால், கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று கூறி என்னை வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டுக்கு அழைத்து வந்த நாள் முதலே என்னை வீட்டுக்குள் அடைத்து வைத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்தார். திருமணம் செய்து வைக்கும் வரையிலும், தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று தெரிவித்தார். நான் மறுத்ததால், அடித்து சித்ரவதை செய்ததோடு, என்னை வீட்டை விட்டு வெளியேற விடவில்லை. ஒரு வழியாக இந்தத் தகவலை என் அக்காவிடம் கொண்டு சென்றதால், அக்கா நேரடியாக வீட்டுக்கு வந்து என்னை மீட்டார்.

இதற்காக, மலுக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் உதவியாக இருந்தார். எனக்கு நடந்த இந்த துன்பங்களைக் கேட்டு என்னைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னார். இருவருக்கும் தற்போது திருமணம் நடந்துவிட்டது. இதையறிந்த என் தந்தை பாண்டிமுத்து எங்கள் இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். என்னைப்போல், வேறு எந்தப் பெண்ணுக்கும் அவரால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே, தந்தை மீது புகார் கொடுத்துள்ளேன்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். பெற்ற மகளுக்குத் தந்தையே பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.