``அ.தி.மு.க வேட்பாளர் காந்தியை தோற்கடிப்போம்" - தஞ்சை தலையாட்டி பொம்மை வியாபாரிகளின் சபதம் | We will work to defeat Thanjavur AIADMK candidate

வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:25 (25/03/2019)

``அ.தி.மு.க வேட்பாளர் காந்தியை தோற்கடிப்போம்" - தஞ்சை தலையாட்டி பொம்மை வியாபாரிகளின் சபதம்

ஒரு கட்சியின் வேட்பாளரை தோற்கடிக்க இன்னொரு கட்சியினர் சபதம் ஏற்பது வழக்கம். ஆனால், தஞ்சாவூரில் அ.தி.மு.க வேட்பாளரை தோற்கடிக்க, அரசியலுக்கு எந்த வகையில் சம்பந்தப்படாத தலையாட்டி பொம்மைகள் மற்றும் கலைப்பொருள் வியாபாரிகள் தங்களது சொந்தச் செலவில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.

தலையாட்டி பொம்மை

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை பெரியகோயில் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார், ``பெரியகோயில் வளாகத்துல தலையாட்டி பொம்மைகள், கலைப் பொருள்கள் வியாபாரம் செஞ்சி முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஜீவனம் நடத்திக்கிட்டு இருந்துச்சு. 2010-ம் ஆண்டு பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது, போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்க, கோயிலுக்கு எதிர்புறம் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கிக் கொடுத்தது. நீண்டகாலமாக வியாபாரம் செஞ்சவங்களுக்குதான் அங்க கடைகள் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது.

காந்தி

2013-ம் ஆண்டு, அ.தி.மு.க பிரமுகர்களான காந்தியும் பண்டரிநாதனும் தங்களோட பினாமிகள் மூலம் இங்க 17 கடைகள் வைக்க முயற்சி செஞ்சாங்க. நாங்க எதிர்ப்பு தெரிவிச்சோம். எங்க பக்கம் உள்ள நியாயத்தை ஏத்துக்கிட்டு அப்போதைய கலெக்டர் பாஸ்கரன், புதுசா வந்த கடைகளை இங்கயிருந்து வெளியேற்றிவிட்டார்.

காந்தி தன்னோட அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, 2014-ம் ஆண்டு ஏராளமான போலீஸை குவிச்சி, இரவோடு இரவாக 33 கடைகளையும் இங்கயிருந்து காலி பண்ண வச்சிட்டார். நாங்க காந்திக்கிட்ட போயி பல முறை கெஞ்சிப் பார்த்தோம். கொஞ்சம் கூட இரக்கம் காட்டவே இல்லை. வேறு வழியில்லாம, மதுரை உயர்நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தோம். 33 குடும்பக்களுக்கு இடம் கொடுக்க சொல்லி தீர்ப்பு வந்துச்சு. சுற்றுலாப் பயணிகள் வரக்கூடிய இடத்துல கண்டிப்பாக இதுமாதிரியான கடைகள் இருக்கணும்னு தீர்ப்புல சொல்லப்பட்டது. பெரியகோயிலுக்கு எந்தவிதத்துலயும் சம்பந்தமில்லாத, விஜயா தியேட்டர்கிட்ட கடைகள் அமைக்க மாவட்டம் நிர்வாகம் இடம் கொடுத்தது. அங்க கொஞ்சம் கூட வியாபாரமே இல்லை. 33 குடும்பங்களும் இப்ப நடுத்தெருவுல நிக்கிது. இதுக்கு காரணமான அ.தி.மு.க பிரமுகர் காந்திதான் இப்ப தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தோற்கடிக்கப்பட்டதான், 33 குடும்பங்களோட மனசு ஆறுதல் அடையும். எங்களோட சொந்தச் செலவுல இவருக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்யப் போறோம்” என்றார்.