`தொகுதி நிலவரங்களைக் கூடவா விசாரிக்க மாட்டாங்க!'- தர்மபுரி தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு எதிராக நிர்வாகிகள் குமுறல் | By election candidate selection, dmk, admk members were upset

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:26 (25/03/2019)

`தொகுதி நிலவரங்களைக் கூடவா விசாரிக்க மாட்டாங்க!'- தர்மபுரி தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு எதிராக நிர்வாகிகள் குமுறல்

தர்மபுரியில் இடைத்தேர்தலைச் சந்திக்கும் பாப்பிரெட்டிபட்டி மற்றும் அரூர் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் தேர்வு கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், தி.மு.க-வில் கருணாநிதியும், அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவும் செய்யாத தவற்றை, இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலினும், அ.தி.மு.க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் செய்துள்ளனர். ``வேட்பாளர்கள் தேர்வின்போது தொகுதி நிலவரம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் இவர்கள் இருவரும் விசாரிக்கக் கூடவா செய்ய மாட்டார்கள்'' எனத் தர்மபுரி மாவட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மனக் குமுறலை வெளிப்படுத்துகின்றனர். 

தர்மபுரி திமுக வேட்பாளர் மணி- அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி

சாதி ரீதியாக அரசியல் செல்வாக்கைக் கொண்டுள்ள தர்மபுரி மாவட்டத்தில், சாதி வாரியாக பிரதிநிதித்துவம் கொடுத்து, தேர்தல் வெற்றியைக் கடந்த காலங்களில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் பெற்று வந்தனர். அதன்படி பெரும்பான்மை வன்னியர் சமூக மக்கள் வாழும் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் வன்னியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்வார்கள். வன்னியர்களுக்கு அடுத்து பட்டியலின மக்கள் அதிகம் வாழும் தொகுதி, அரூர் (தனி) என்பதால், 2 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட கவுண்டர் சமூகத்துக்கு பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியை ஒதுக்கி வெற்றிகளை இரண்டு கழகங்களும் பெற்று வந்தது.

காரணம், தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கும் அரூர் தனி தொகுதியில் 60,000 கவுண்டர் வாக்காளர்களும்,  பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் 40,000 கவுண்டர் வாக்காளர்கள் என மொத்தம் ஒரு லட்சம் கவுண்டர் வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இந்த வாக்குகளைப் பெறவே, தொடர்ந்து பல தேர்தல்களில் கவுண்டர் சமூகத்துக்கு பாப்பிரெட்டிபட்டி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத பாலக்கோடு தொகுதியைச் சேர்ந்த ஆ.மணிக்குத் தி.மு.க சீட் கொடுத்து, கட்சித் தொண்டர்களையும், கவுண்டர் சமூக மக்களின் எதிர்ப்பைத் தி.மு.க. தலைமை பெற்றுள்ளது.

இதேபோல அ.தி.மு.க தலைமை பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி கோவிந்தசாமிக்கு சீட் கொடுத்து, அ.தி.மு.க நிர்வாகிகள் கோபத்தையும், கவுண்டர் சமூக மக்களின் எதிர்ப்பை அ.தி.மு.க தலைமை பெற்றுள்ளது.

இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் தி.மு.க, அ.தி.மு.க தலைமை செய்துள்ள இந்தத் தவறுகளால், அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகளைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. 

தர்மபுரி மாவட்ட அரசியல் சூழ்நிலையை உணர்ந்துதான், அ.ம.மு.க-வில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிட இருந்த பழனியப்பன், மீண்டும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து, நாடாளுமன்ற அ.ம.மு.க வேட்பாளர் வன்னியச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேர்வு செய்ய ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதற்காகவே தர்மபுரி நாடாளுமன்றம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிவிப்பை அ.ம.மு.க நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.