`நான் தேர்தலில் போட்டியிடுவதே பரபரப்புதான்!'- தென் சென்னையில் களமிறங்கும் பவர் ஸ்டார் | Actor power star seenivasan interview

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:26 (25/03/2019)

`நான் தேர்தலில் போட்டியிடுவதே பரபரப்புதான்!'- தென் சென்னையில் களமிறங்கும் பவர் ஸ்டார்

பவர் ஸ்டார் சீனிவாசன்

மக்களவைத் தேர்தலை ரஜினி சந்திக்காத நேரத்தில் தைரியமாக பவர் ஸ்டார் சீனிவாசன் சந்திப்பதாகவும், தென்சென்னை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும்  நம்மிடம் அவர் தெரிவித்தார்.  

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் சார்பில் பவர் ஸ்டார் சீனிவாசன், தென்சென்னை தொகுதியில் போட்டியிடப்போவதாகத் தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்த அவரிடம் பேசினோம். அப்போது அவர், நம்மிடம் அரசியல் குறித்து பரபரப்பாக பேசினார். 

 பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அரசியல் குறித்து சிலகேள்விகளை முன்வைத்தோம். 

 சினிமாவிலிருந்து திடீர் அரசியல் ஏன்? 

``நான், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியில் கடந்த ஓராண்டுக்கு முன் சேர்ந்தேன். மாநில துணைத் தலைவராக இருந்துவருகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னையில் போட்டியிடவுள்ளேன். தமிழகத்தில் எங்கள் கட்சி சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். ராமநாதபுரத்தில் புதிய படமான `கபடிவீரன்' படத்தின் ஹீரோ அரசப்பன் போட்டியிடுகிறார்". 

 எதை மையமாக வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளீர்கள்? 

 ``பெண்களை மையப்படுத்திதான் என்னுடைய தேர்தல் பிரசாரம் இருக்கும். பெண்கள் பாதுகாப்பு, இடஒதுக்கீடு ஆகியவைதான் என்னுடைய தேர்தல் பிரசாரத்தின் மையப்புள்ளி. ஏனெனில் பெண்கள்தான் இந்த நாட்டின் கண்கள். பொள்ளாச்சி விவகாரம் நாட்டையே அதிர்ச்சியடையவைத்துள்ளது. அதனால் பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்கக்கூடாது. எங்கள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்". 

சீனிவாசன்


 பவர் ஸ்டாரின் தேர்தல் பவர் என்ன? 

`` மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். இன்றைய அரசியலில் யாரையும் விமர்சிக்கப் போவதில்லை. யாரையும் குறை சொல்வதால் எதுவும் மாறப்போவதில்லை. நான் விமர்சித்துதான் மக்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தூய்மையான அரசியல் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. காசுக்காக மக்கள் ஓட்டுப்போடக்கூடாது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்". 

 தென்சென்னையில் போட்டியிடும் உங்களுக்குப் போட்டியாக யாரை கருதுகிறீர்கள்?

 ``எனக்கு என்றுமே போட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிதான். ரஜினி சந்திக்காத இந்தத் தேர்தலை பவர் ஸ்டார் சீனிவாசன் தைரியமாக சந்திக்கிறேன்"
 
எப்போது வேட்பு மனுத்தாக்கல்? 

``மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே விரைவில் சென்னை வருகிறார். அவரிடம் ஆசி பெற்றுவிட்டு இரண்டு நாள்களுக்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளேன். பவர் ஸ்டாரை நிச்சயம் தென்சென்னை மக்கள் ஆதரிப்பார்கள்". 

பவர் ஸ்டார் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. சமீபத்தில்கூட உங்களைக் கடத்தியதாக செய்திகள் வெளியானது. தற்போது தென்சென்னை வேட்பாளராக போட்டியிட உள்ளீர்கள். அரசியலிலும் பரபரப்பு இருக்குமா? 

 ``கண்டிப்பாக இருக்கும். என் மீதான வழக்குகளை சட்டரீதியாக சந்தித்துவருகிறேன். எனக்கு அறிமுகமான தொகுதி தென்சென்னை. இதனால்தான் எங்கள் கட்சி என்னை தென்சென்னை வேட்பாளராக நிறுத்த முன்வந்துள்ளது. தென்சென்னை மட்டுமல்ல என்னை எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். இதனால் எனக்கு அறிமுகம் தேவையில்லை. என்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். நான் தேர்தலில் போட்டியிடுவதே பரபரப்புதான்" 

தேர்தலில் நீங்கள் போட்டியிடுவதாக அறிவித்தப் பிறகு வரும் பிரச்னைகளை எப்படி சந்திக்கப்போகிறீர்கள்?

 ``நான் சந்திக்காத கஷ்டம் எதுவும் இல்லை. எல்லாமே எனக்கு தூசிதான். தமிழக மக்கள் என்னைக் காமெடியனாகதான் பார்த்திருக்கிறார்கள். நான் தமிழக மக்களின் செல்லப்பிள்ளை. என்னிடம் பணம், ஆள்பலம் கிடையாது. மக்களை நம்பி இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். எனக்கு தென் சென்னையில் ரசிகர்கள் உள்ளனர். எங்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், எனக்கு ஆதரவாக இருப்பவர்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன். அமைதி, காந்தி வழியில் நாங்கள் அரசியல் செய்கிறோம். என்றுமே அன்புக்கு இந்த பவர் ஸ்டார் சீனிவாசன் அடிமை".