`நீ கலந்துகொள்ளணும்னு சசிகலா சொன்னார், அதனாலேயே வந்தேன்!'- நடராசனின் நினைவேந்தலில் கண்கலங்கிய டி.டி.வி | TTV Dinakaran at M.Natarasan Memorial Day event

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:26 (25/03/2019)

`நீ கலந்துகொள்ளணும்னு சசிகலா சொன்னார், அதனாலேயே வந்தேன்!'- நடராசனின் நினைவேந்தலில் கண்கலங்கிய டி.டி.வி

தஞ்சாவூரில் நடைபெற்ற சசிகலா கணவர் ம.நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பேசிய தினகரன், `சசிகலா சொன்னதாலேயே பல வேலைகளுக்கு நடுவே இதில் கலந்துகொள்ள வந்தேன்' என கண் கலங்கினார்.

நடராசனின் நினைவேந்தல் நிகழ்ச்சி

சசிகலாவின் கணவர்  ம.நடராசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று தஞ்சாவூரில் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் டி.டி.வி.தினகரன், கி.வீரமணி, கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மருதப்பா அறக்கட்டளை சார்பில் `யாதுமாகி நின்றாய்' என்கிற பெயரில் நடராசன் குடும்பத்தினர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். நடராசன் வாழும் நினைவுகள் என்கிற பெயரில் குறுந்தகடு வெளியிடப்பட்டது.

இதில் வரவேற்புரை நிகழ்த்திய தினகரன், ``எவ்வளவோ வேலைகளுக்கு நடுவே நான் எனது சித்தப்பாவின் நினைவேந்தல் நிகழ்வுக்கு வந்திருக்கிறேன். நடராசனின் துணைவியாரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளருமான சசிகலா, `உனக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் நீ இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும்' எனக் கூறினார். அதனாலேயே நான் இதில் கலந்துகொண்டேன்'' எனக் கூறியபோது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அதோடு வேறு எதுவும் பேசாமல் எல்லோருக்கும் நன்றி என கூறி பேச்சை முடித்துக்கொண்டார். தேர்தல் நேரம் பரபரப்பாக எதுவும் பேசுவார் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தினகரன் கண் கலங்கியது ஒரு வித அமைதியையும், உருக்கத்தையும் ஏற்படுத்தியது.

தினகரன்

திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், ``கணவரின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை என சசிகலா வருந்திக்கொண்டிருக்கிறார். பலர் உயர்வதற்கு ஏணியாக இருந்தவர் ம.நடராசன். என்னை பெரியார் என்றுதான் அழைப்பார். பலர் மீண்டு வருவதற்கு பல உதவிகள் செய்தவர். பதவிகள் கிடைக்கவில்லை என்றால் மாற்று அணிக்கு செல்வதுதான் அகில இந்திய அரசியலில் நடக்கிறது. ஆனால், ம.நடராசன் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர். பொது வாழ்க்கையில் மானம் பார்க்கக்கூடாது. பருவம் பார்க்கக்கூடாது. அதுபோல் செயல்பட்டவர். அவர் மறைவால் நேரடியாக துன்பப்பட்டு கொண்டிருப்பவர் சசிகலா. அவருக்கு நான் ஆறுதல் கூறுகிறேன்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க