முதலில் மகனுக்குத்தான் பிரசாரம்!- பாலமேட்டில் ஓ.பி.எஸ். தொடங்கியதின் பின்னணி என்ன? | Election campaign started by ops for his son

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:26 (25/03/2019)

முதலில் மகனுக்குத்தான் பிரசாரம்!- பாலமேட்டில் ஓ.பி.எஸ். தொடங்கியதின் பின்னணி என்ன?

மகனுக்கு தேனி மக்களைவைத் தொகுதியை வாங்கிக் கொடுத்ததோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்காமல் விறுவிறு பிரசாரத்திலும் இறங்கிவிட்டார் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். இன்று காலை ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற பாலமேடு மஞ்சமலை அய்யனார் கோயிலில் வழிப்பட்டு மகனுக்கு தேர்தல் வேலையைத் தொடங்கினார். 

ஓ.பி.எஸ். மகனுக்கு வரவேற்பு


ஏன் இங்கிருந்து தொடங்குகிறார் என்று விசாரித்தபோது, தேனி மக்களவைத் தொகுதியில்  மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உசிலம்பட்டி, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அது மட்டுமல்லாமல், ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை போட்டதால் ஜல்லிக்கட்டு நாயகன் என்று கட்சியினரால் ஓ.பி.எஸ். அழைக்கப்பட்டு வருகிறார். அந்தப் பெருமையைப் பயன்படுத்திக்கொள்ளவும், பாலமேட்டிலுள்ள மஞ்சமலை அய்யனார் கோயிலில் இருந்து தொடங்கும் எந்தக் காரியமும் வெற்றியைக் கொடுக்கும் என்று சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் கூறியதாலும், இங்கிருந்து பிரசாரத்தைத் தொடங்கினார்.  அடுத்து தேனியில் அறிமுக விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார் என்றனர்.

ஓ.பி.எஸ். வரவேற்று  செண்டை மேளம் அடிக்கின்றனர்

அந்த அடிப்படையில் இன்று காலை பாலமேட்டில் சாமி கும்பிட்டவர் வருகின்ற வழியில் செண்டை மேளம் அதிர, ஜல்லிக்கட்டு காளைகளுடன் கட்சியினர் ஏற்பாடு செய்த பிரமாண்ட வரவேற்புகளை மகனுடன் ஏற்றுக்கொண்டார். ``நான் போட்டியிடுவதாக நினைத்து என் மகனின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்'' என்று கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். அவருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம், கருப்பையா, எம்.பி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தனர். மகனுக்காக களத்தில் இறங்கிவிட்டார் ஓ.பி.எஸ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க