சேலம் சிறுமி பாலியல் படுகொலை... பா.ம.க நிர்வாகி உட்பட 5 பேருக்கு தண்டனை உறுதி! | In the case of sexual abuse and murder of a minor, five persons, including a PMK executive, are convicted.

வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (20/03/2019)

கடைசி தொடர்பு:11:44 (21/03/2019)

சேலம் சிறுமி பாலியல் படுகொலை... பா.ம.க நிர்வாகி உட்பட 5 பேருக்கு தண்டனை உறுதி!

ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதுவரை பரமசிவம் குடும்பத்துக்கு  ஆதரவாக இருந்த ஊர் மக்கள், தன் மகன்களும் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த பிறகு தனிமைப்படுத்தியதோடு வழக்கைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தினார்கள். இதனால் பரமசிவத்தின் குடும்பத்தினர் ஊரைக் காலி செய்துவிட்டு வேறோர் ஊருக்குச் சென்றுவிட்டார்கள்.  

சேலம் சிறுமி பாலியல் படுகொலை... பா.ம.க நிர்வாகி உட்பட 5 பேருக்கு தண்டனை உறுதி!

மிழகத்தையே உலுக்கிய சேலம் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில் சேலம் நீதிமன்றம் பா.ம.க. முன்னாள் நிர்வாகி பூபதி உட்பட 5 பேருக்கு தண்டனையை உறுதி செய்து அவர்களைக் காவல் துறை கஸ்டடி எடுத்துக்கொள்ள உத்தரவு பிறப்பித்தது. இது, சேலம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பரமசிவம், பழனியம்மாள் தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். இவர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பரமசிவத்தின் மூத்த மகள் . சென்றாயம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2014 பிப்ரவரி 14-ம் தேதி வழக்கம்போல இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்தோடு உறங்கிக்கொண்டிருந்தார்கள். இரவு 11:00 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பா.ம.க முன்னாள் நிர்வாகி பூபதி, சினேக்பாபு என்கிற ஆனந்தபாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் மது அருந்திவிட்டுப் போதையில் கோயிலில் அமர்ந்திருக்கிறார்கள். கதவு இல்லாத வீட்டில் பரமசிவத்தின் குடும்பத்தினர் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருப்பதை அறிந்த இந்த 5 பேரும், அவரின் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த சிறுமியின் வாயில் துணியைவைத்து அழுத்தி டூவீலரில் அருகில் உள்ள காட்டுக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள்.

பாலியல்

ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த மதுவை 5 பேரும் காட்டில் அமர்ந்து குடித்துவிட்டு, அழுதுகொண்டிருந்த சிறுமியை ஒவ்வொருவராக மாறிமாறி பாலியல் கூட்டு வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இந்தக் காமவெறி பிடித்த மிருகங்களின் வன்கொடுமையைத் தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே சிறுமி மரணமடைந்தார்.

அதை அறிந்தும் காமக்கொடூரர்கள் உயிரற்ற உடலில் வன்கொடுமை செய்ததாகத் தகவல் தெரியவருகிறது. பிறகு, நரபலி என்று நாடகம் நடத்துவதற்காகச் சிறுமியின் உடல் முழுவதும் மஞ்சள், திருநீறைப் பூசி அருகில் உள்ள மரத்தில் தொங்கவிட்டுச் சென்றுவிட்டார்கள். அடுத்த நாள் சிறுமி காணாமல் போனதையடுத்து ஊரே தேடிக் கொண்டிருந்தபோது இவர்களும் அவர்களோடு சேர்ந்து தேடினார்கள்.

இச்சம்பவம் காவல் துறைக்குத் தெரியவந்ததை அடுத்து 5 பேரையும் விசாரணை செய்து, அவர்கள் மீது பாலியல் கூட்டு வன்கொடுமை  மற்றும் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தார்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதுவரை பரமசிவம் குடும்பத்துக்கு  ஆதரவாக இருந்த ஊர் மக்கள், தன் மகன்களும் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த பிறகு தனிமைப்படுத்தியதோடு வழக்கைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தினார்கள். இதனால் பரமசிவத்தின் குடும்பத்தினர் ஊரைக் காலி செய்துவிட்டு வேறோர் ஊருக்குச் சென்றுவிட்டார்கள்.  

இந்த வழக்கு 2014-ல் இருந்து சேலம் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக தனசேகரனும், எதிர் தரப்பில் திரவியம், பொன்மதிவதனன் வாதாடி வந்தார்கள். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால், நீதிபதி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதையடுத்து நேற்று நீதிமன்ற வளாகம் பெரும் பரபரப்பாக இருந்தது. காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள்.

பூமொழி

நீதிபதி விஜயகுமாரி மாலை 5:00 மணிக்கு தன் இருக்கையில் அமர்ந்தார்...

நீதிபதி: (குற்றவாளிகளைப் பார்த்து...) ``உங்களுக்கு இந்த நீதிமன்றம் தண்டனை வழங்க உறுதி செய்துள்ளது. இறுதியாக நீங்கள் சொல்ல விரும்புவதைச் சொல்லலாம்" என்றார்.

அதையடுத்து சினேக்பாபு என்கிற ஆனந்தபாபு: (நீதிபதியைப் பார்த்து...) ``எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை".  

ஆனந்தன்: (நீதிபதியைப் பார்த்து...) ``சம்பவத்தன்று நான் வேலைக்குச் சென்றுவிட்டேன். எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை".

பிரபாகரன்: ( நீதிபதியைப் பார்த்து... ) ``எனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பில்லை. ஏத்தாபூர் காவல் துறையினர் அடித்து ஒப்புக்கொள்ளச் செய்து விட்டார்கள்".

பாலகிருஷ்ணன்: ( நீதிபதியைப் பார்த்து...) ``இந்த வழக்குக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் சம்பவத்தன்று ஈரோட்டில் இருந்தேன். ஏத்தாப்பூர், வாழப்பாடி, காரிப்பட்டி காவல் துறையினர் என்னை அடித்து ஒப்புக்கொள்ளச் செய்தார்கள்".

பூபதி: (நீதிபதியைப் பார்த்து...) ``இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை".

அதையடுத்து அரசு வழக்கறிஞர் தனசேகரன், ``அப்பாவி சிறுமியை நடு இரவில் தூக்கிச் சென்று இந்த 5 குற்றவாளிகளும் கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்துள்ளார்கள். இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்'' என்றார்.

இறுதியாக நீதிபதி: (காவல் துறையினரைப் பார்த்து...) ``5 பேரையும் கஸ்டடி எடுத்துக்கொள்ளுங்கள். 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். அன்று அவர்களை ஆஜர்படுத்த வேண்டும்".

அதையடுத்து காவல் துறையினர் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் அங்க அடையாளங்கள் மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

இதுபற்றி தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் தலைவர் பூமொழி, ``இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேரும் அபாயகரமானவர்கள். குழந்தை என்றுகூடப் பாராமல் சீரழித்துக் கொலைசெய்த கொலைகாரர்கள். இவர்களுக்கு நீதிமன்றம் ஈவு இரக்கம் காட்டக்கூடாது. இவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்