`செலவுகளை நீங்கதான் பார்த்துக்கணும்' - வேட்பாளருக்காக மல்லுக்கட்டும் புதுவை காங்கிரஸ்! | puducherry Congress candidate till not confirmed

வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:28 (25/03/2019)

`செலவுகளை நீங்கதான் பார்த்துக்கணும்' - வேட்பாளருக்காக மல்லுக்கட்டும் புதுவை காங்கிரஸ்!

நீண்ட இழுபறிக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்திருக்கிறது புதுச்சேரி காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ்

புதுச்சேரியின் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே வேட்பாளரை இறுதி செய்து, பணிகளைத் தொடங்கிவிட்டது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட பிறகும் வேட்பாளர் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்தது புதுச்சேரி காங்கிரஸ். ``ஆளும் கட்சி என்பதால் தேர்தல் செலவுகளை நீங்களேதான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று டெல்லி தலைமை கூறிவிட்டதால் பாய்ந்து பதுங்க ஆரம்பித்தனர் தலைவர்கள். அதுவரை தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்த சபாநாயகர் வைத்திலிங்கமும், சுமார் 40 கோடி ரூபாயை மொத்தமாக தலையில் கட்டிவிடுவார்கள் என்று நினைத்து ஒதுங்க ஆரம்பித்தார்.

நாராயணசாமி

இந்தச் செலவைத் தாங்கும் அளவுக்கு ஒரு வேட்பாளர் வேண்டுமே என்று நினைத்த புதுச்சேரி காங்கிரஸ், தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகனின் மகனைத் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்ய முடிவெடுத்து தூது அனுப்பியது. ஆனால் ``தி.மு.க சார்பில் போட்டியிடுவதாக இருந்தால் என் மகனை நிறுத்துகிறேன்” என்று ஜகத்ரட்சகன் சொல்லிவிட்டதாலும், ``ஒரு வேட்பாளரைக் கூட நிறுத்த முடியாத அளவுக்குத்தான் இத்தனை வருஷமா நீங்க கட்சி நடத்திக்கிட்டு இருக்கீங்களா?” என்று கட்சி மேலிடம் கடுமை காட்டியதாலும் அந்த முடிவு கைவிடப்பட்டது.

வைத்திலிங்கம்

அடுத்ததாக முதல்வர் நாராயணசாமிக்காக தொகுதியை விட்டுக்கொடுத்த ஜான்குமாரை நிறுத்த முடிவு செய்தனர். பொருளாதார ரீதியாக அவர் பலமாக இருந்தாலும் கட்சியில் ஜூனியர், கல்வித்தகுதி போன்ற விஷயங்களால் அவரையும் நிராகரித்திருக்கிறது கட்சித் தலைமை. இந்நிலையில்தான், செலவுக்குத் தயங்கினால் கட்சி மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அதனால் அமைச்சர்கள் அனைவரும் தலா மூன்று கோடி ரூபாய் போட்டு வேட்பாளரை நிறுத்துவோம் என்று முடிவு செய்யப்பட்டதாம். அதையடுத்துதான் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி சுப்பிரமணியனை இறுதி செய்தார்கள். ஆனால், ``2009-ல் நான் முதல்வராக இருக்கும்போது நடந்த எம்.பி தேர்தலில் நாராயணசாமிக்குச் செலவு செய்தேன். அந்தச் செலவை இப்போது எனக்கு செய்யட்டும். நான் நிற்கிறேன்” என்று போர்க்கொடி உயர்த்தினாராம் சபாநாயகர் வைத்திலிங்கம். அமைச்சர்களும் அவரது கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டியதோடு, ஏ.வி.சுப்பிரமணியத்தையும் காம்ப்ரமைஸ் செய்திருக்கிறார்கள்.

ஏ.வி.சுப்பிரமணியன்

அதனையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளருமான சஞ்சய் தத்தை சந்தித்த அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவரான வைத்திலிங்கத்தை நிறுத்தினால் எளிதில் வெற்றிபெறலாம் என்று கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், சபாநாயகர் வைத்திலிங்கம், ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோரை நேற்று அவசரமாக டெல்லிக்கு அழைத்து ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது. ``ஒருவேளை தேர்தலில் வைத்திலிங்கம் வெற்றிபெற்றால் இடைத்தேர்தலைச் சந்திக்க நேரிடும்.

நாடாளுமன்றத் தேர்தல்

ஏற்கெனவே பெரும்பான்மை இல்லாமல் இருக்கும் நமக்கு அது சாதகமாக இருக்குமா?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்கள் வேட்பாளர் தேர்வுக்குழுவினர். அதற்கு, ``இடைத்தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்” என்று கூறியதையடுத்தே வைத்திலிங்கத்தை இறுதி செய்து ராகுல்காந்திக்கு அனுப்பியிருக்கிறதாம் தேர்வுக்குழு. இன்று இரவு டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்திற்குப் பின், தமிழக வேட்பாளர்களுடன் சேர்த்து புதுச்சேரி வேட்பாளரையும் ராகுல்காந்தி அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க