`எடப்பாடி பழனிசாமி முதல்வரானது நாம் பெற்ற பேறு' - உருகிய பா.ம.க தலைவர் ஜி.கே.மணி! | PMK leader GK.Mani praised tamil nadu cm palaniswami

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:28 (25/03/2019)

`எடப்பாடி பழனிசாமி முதல்வரானது நாம் பெற்ற பேறு' - உருகிய பா.ம.க தலைவர் ஜி.கே.மணி!

எடப்பாடி பழனிசாமி முதல்வரானது நாம் பெற்ற பேறு. பா.ம.க தலைவர் ஜி.கே.மணி உருக்கமாகப் பேசியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ஜி.கே.மணி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் சுசீந்தரன், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் ரஞ்சித், தே.மு.தி.க உயர் மட்ட குழு உறுப்பினர் இளங்கோவன், பா.ம.க கட்சியின் தலைவர் கோ.க.மணி, அருள், கார்த்திக், கண்ணையன் மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த அண்ணாதுரை, கோபி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் என அ.தி.மு.க கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஆஜரானார்கள். ஆனால் கூட்டத்திற்கு தாமதமாகவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் கொண்டுவரப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.
 
இக்கூட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி சரியாக 9:50 மணிக்கு வந்ததும் மைக் பிடித்தவர், ``அம்மாவின் வழிகாட்டுதல் படி தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால் நம்மோடு பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புரட்சி பாரதம், கொங்குநாடு மக்கள் கட்சி என மெகா கூட்டணி அமைத்திருக்கிறோம். இந்தக் கூட்டணி இந்தியாவிலேயே பெரிய கூட்டணி'' என்றவர். நல்ல நேரம் 10:00 மணிக்குள் என்றதால் கூட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். இனி கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பேசிய பிறகு நான் பேசுவேன்.

ஜி.கே.மணி

அதையடுத்து ஒவ்வொரு கூட்டணி கட்சித் தலைவரும் பேசினார்கள். அனைவரும் தேர்தலை விட முதல்வரின் துதி பாடக்கூடியவர்களாகவே இருந்தார்கள். இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ``முதல்வர் அமைதியானவர், எளிமையானவர், கருத்தாளர், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடக்கூடியவர். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பது சேலத்திற்கே பெருமை. அவர் முதல்வராக இருப்பது நாம் பெற்ற பேறு'' எனப் பேசினார்.

கூட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர், ``வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 4 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். குழந்தையே இல்லாமல் பெயர் வைத்துக் கொண்டிருப்பது போலப் பதிவே இல்லாத தினகரன் கட்சி எனக்கு ஒரு பொருட்டு இல்லை. சென்னையை அடுத்து கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும். தேர்தலில் வெற்றி பெற்ற பா.ம.கவின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்'' என்றார்.