`பூரண மதுவிலக்கு ஏன் இல்லை?' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சு | tn minister rajendira balaji controversial speech about no alcohol prohibition

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:28 (25/03/2019)

`பூரண மதுவிலக்கு ஏன் இல்லை?' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சு

பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்தினால் நரம்புத்தளர்ச்சி ஏற்படும் எனத் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளயம் அருகே உள்ள சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முறம்புப் பகுதியில் சாத்தூர் அ.தி.மு.க வேட்பாளர் ராஜவர்மன், விருதுநகர் மக்களவைத் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி ஆகியோரை ஆதரித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``விருதுநகர் மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகள் பலமாக உள்ளன. நிச்சயம் வெற்றி பெறுவோம். அ.ம.மு.க சுயேச்சை போல உள்ளது. அது களத்தில் இல்லை. இந்தத் தேர்தல் எடப்பாடியின் அஸ்திவாரத்தைப் பலப்படுத்தும் தேர்தல். மது குடிப்பவர்களை திடீரெனக் குடிக்காதே என்றால் கை, கால் நடுக்கம் ஏற்படும். சிலருக்குக் காலையில் மது குடிக்காவிட்டால் நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிறுத்த வேண்டும். திடீரென மதுவிலக்கை அமல்படுத்தினால் அவர்கள் போதைக்காக கள்ளச்சாராயம் குடிக்கச் சென்றுவிடுவார்கள். இதனால் உயிரிழப்புகள் ஏற்படும். எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

தி.மு.கவில் லீடர்ஸ் மட்டுமே உள்ளனர். கேடர்ஸ் கிடையாது. அ.தி.மு.க தன் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற வைக்கும். தி.மு.க தன் கூட்டணிக் கட்சிகளைத் தோல்வியடைய வைக்கும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். அவர்களைப் போன்ற குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுத்தால்தான் இனி யாரும் இதுபோல் தவறு செய்ய மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனப் பல ஆண்டுகளாகப் பொதுமக்கள் வலியுறுத்தி வரும் வேளையில் அதை  அமல்படுத்தினால் நரம்புத்தளர்ச்சி வரும் என அமைச்சரே பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல விருதுநகர் மக்களவைத் தொகுதி மக்களிடம் இராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க வேட்பாளருக்குத் தாமரை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பேசியது அங்கே இருந்த வாக்காளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.