‘கருணாநிதி பிறந்த நாளில் மோடி ஆட்சி முடியும்’ - திருவாரூரில் தகித்த ஸ்டாலின்! | Mk stalin Start poll campaign from karunanidhi's thiruvarur constituency

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:28 (25/03/2019)

‘கருணாநிதி பிறந்த நாளில் மோடி ஆட்சி முடியும்’ - திருவாரூரில் தகித்த ஸ்டாலின்!

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தை திருவாரூரிலிருந்து தொடங்கினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். 

ஸ்டாலின்

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் அதே நாளில் நடைபெறவுள்ளது. இந்த இரு தேர்தல்களையும் எதிர்கொள்ள தமிழகக் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இன்றும் ஓரளவுக்கு அனைத்துக் கட்சிகளும் தங்களின் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. 

ஸ்டாலின்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தன் முதல் பிரசாரத்தை கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரிலிருந்து இன்று தொடங்கினார். திருவாரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆகிய இருவரையும் ஆதரித்து பிரசாரம் செய்தார். திருவாரூரில் பேசிய ஸ்டாலின், ``இந்தியாவின் தலைநகர் டெல்லி, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைநகர் திருவாரூர். கருணாநிதியை ஈன்ற ஊர் இது. திருவாரூர் மக்களின் அன்பைப் பெற்றால்தான் கருணாநிதியின் வாழ்த்துகளை நான் பெற முடியும் என்பதால்தான் இங்கிருந்து பிரசாரத்தைத் தொடங்கியுள்ளேன்.

ஸ்டாலின்

விரைவில் நாம் 17-வது நாடாளுமன்றத் தேர்தலையும், தமிழகத்தில் 18 தொகுதிகளின் இடைத்தேர்தலையும் சந்திக்கவுள்ளோம். திருவாரூர் தொகுதியில் பூண்டி கலைவாணனும், நாகையில் செல்வராஜும் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் உருவத்தில் வேறுபட்டிருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்டவர்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி முடிவடையும் நாள் ஜூன் 3-ம் தேதி. தலைவர் கலைஞரின் பிறந்த நாளும் ஜூன் 3 -ம் தேதி. என்ன ஒரு பொருத்தம் பாருங்கள். தி.மு.கவை விட ஆளும் கட்சியை அதிகமாகச் சாடிய ஒரு கட்சி தற்போது ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. எந்தெந்தத் துறையில் அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள் எனப் புத்தகமே வெளியிட்டது அந்தக் கட்சி, இருந்தும் தற்போது கூட்டணி வைத்துள்ளது. எத்தனை கூட்டணி வைத்தாலும் அனைத்தையும் நாங்கள் முறியடிப்போம்’ எனப் பேசினார்.