``பஸ்லகூட பறையை மறைச்சுதான் காெண்டுபாேறோம்!'' - இசைக் கலைஞர்கள் வேதனை | "Parai is still an untouchable instrument?" questions these musicians

வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (20/03/2019)

கடைசி தொடர்பு:18:36 (20/03/2019)

``பஸ்லகூட பறையை மறைச்சுதான் காெண்டுபாேறோம்!'' - இசைக் கலைஞர்கள் வேதனை

"பஸ்ல கூட எங்க பறைய மறைச்சிதான் கொண்டு போகணும், தமிழ்நாட்ல இன்னும் நெலம மாறல!" வேதனை தெரிவிக்கும் பறையிசை கலைஞர்கள்.

``பஸ்லகூட பறையை மறைச்சுதான் காெண்டுபாேறோம்!'' - இசைக் கலைஞர்கள் வேதனை

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவ மாணவிகள் சூழ, பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு இசைத்த ஒரு பெண் உட்பட அனைவருக்கும் அதிகபட்சம் 30 வயது மட்டுமே இருக்கும். தலையில் மஞ்சள் நிற ரிப்பன், காலில் சலங்கை என நடனத்துடன் அதிரும் பறையை திறந்தவெளியில் இசைத்துக்கொண்டிருந்தனர். மாணவ மாணவிகளும் ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகத்தில் ஆடத் தொடங்கினர். அதிரும் இசை, நடனங்கள், கைதட்டல்கள் என அனைத்தும் நிறைவடைந்த பிறகு, களைப்பில் இருந்த கலைக் குழுவினரைச் சந்தித்தோம்.

பறை

குழுவில் இருந்த பெண் கலைஞர் ஜெனிபர், ``சொந்த ஊர் திருவண்ணாமலை. தமிழ்ல எம்.ஏ., பி.எட் படிச்சுட்டு, சென்னையில தனியார் பள்ளியில தமிழ் ஆசிரியையா இருக்கேன். சின்னதுல இருந்தே எனக்கு இசை மேல ரொம்ப ப்ரியம். எது நமக்கான இசைனு தேடி, நாலு வருசத்துக்கு முன்னாடி பறை இசையைக் கத்துக்கிட்டேன். இந்தக் குழுவுல இணைஞ்சு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள்னு கலந்துக்கிட்டு  இசைக்கிறோம். வெளியூருக்குப் போறதால, வீட்ல அப்ப அப்ப எதிர்ப்பு இருந்தது. அப்புறம் என் மேல இருந்த நம்பிக்கையில வெளியூர் நிகழ்ச்சிகளுக்கும் அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்க.

நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டு கைதட்டல் வாங்கும்போது சந்தோஷமா இருக்கும். இப்பெல்லாம் சில இடங்கள்ல நிலைமை காெஞ்சம் மாறியிருக்கு. பல இடங்கள்ல எங்களைப் பார்க்கிறதே ஒரு மாதிரியாத்தான் இருக்கும். என்னதான் படிச்சி நான் டீச்சரா இருந்தாலும், இந்தக் கருவியை கையில வெச்சிருந்தா ஏதோ தீண்டாத ஒண்ணாப் பார்க்கிறாங்க. பரவாயில்ல, எங்க குழுவுடன் இணைஞ்சு தொடர்ந்து இந்தப் பறை இசையை மீட்டெடுப்போம்'' என்றார் நம்பிக்கையுடன்.

Parai

இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஸ்மித் வில்சன், ```அறம் பறை இசைக் குழு' என்ற பெயரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குழுவை உருவாக்கினோம். பறை இசை மீது இன்றளவும் தவறான ஒரு புரிதல் மக்களிடம் உண்டு. சாதிப் பறை, சாவுப் பறை எனக் கருதுகின்றனர். இந்த எண்ணத்தை மாற்ற, நாங்கள் நண்பர்கள் குழுவாக இணைந்து பணியாற்றத் தொடங்கினோம். எங்கள் குழுவில் வழக்கறிஞர், மருத்துவர், ஆசிரியர் உட்பட பல துறைகளைச் சேர்ந்த 20 பேர் இருக்கிறாேம். தோலினால் செய்த பாரம்பர்யப் பறையை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

நாட்டுப்புறக் கலை

திருமணம், காதணி விழா பாேன்ற சுப நிகழ்ச்சிகளில் மட்டுமே நாங்கள் பங்கேற்பது என முடிவுசெய்துள்ளாேம். பிற மாநிலங்களிலும், வெளிநாடுவாழ் தமிழர்களும் எங்களை மதித்து முழு ஆதரவு தருகின்றனர். வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் பறை இசையைக் கற்றுச் செல்கின்றனர். ஆனால், தமிழகத்தில், இன்றளவும் பல இடங்களில் இதை ஒரு தீட்டுப் பொருளாகவே பார்க்கின்றனர். இன்னும் சாெல்லப்பாேனால், குறிப்பிட்ட பகுதிகளில் பறை இசைக் கருவிகளை வெளியில்கூட காட்ட முடியாது. பஸ்ஸில்கூட பைக்குள் வைத்து மறைத்துதான் எடுத்துப்போகவேண்டிய சூழல் இன்றும் இருக்கிறது. இருப்பினும், இதை அனைத்துத் தரப்பு மக்களின் இசைக் கருவியாக மாற்றும் வரை நாங்கள் பறையுடன் பயணிப்போம்’’ என்றார் உறுதியாக. 


டிரெண்டிங் @ விகடன்