`பெண் ஊழியர்கள் உதவியுடன் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை' - நாகர்கோவில் கல்லூரி நிறுவனர் கைது! | Nagercoil College founder arrested for sexual abuse

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (20/03/2019)

கடைசி தொடர்பு:17:45 (20/03/2019)

`பெண் ஊழியர்கள் உதவியுடன் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை' - நாகர்கோவில் கல்லூரி நிறுவனர் கைது!

பாரா மெடிக்கல் கல்லூரி ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி நிறுவனர் கைது செய்யப்பட்டார். மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக பெண் இணை இயக்குநர்கள் இரண்டுபேரும் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் தொல்லை கொடுத்த ரவி

நாகர்கோவிலை அடுத்த இறைச்சக்குளத்தில் அமைந்துள்ளது ஜேக்கப் பாரா மெடிக்கல். இங்கு சுமார் 80 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 10 பணியாளர்கள் வேலைசெய்து வந்தனர். இந்தக் கல்லூரியின் நிறுவனர் ரவி. இவர் இரண்டு பெண் ஊழியர்களின் துணையோடு ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரவி தனது அறைக்கு ஓர் ஆசிரியையை அழைத்து, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ரவியின் அறையிலிருந்து கலங்கிய கண்களுடன் அந்த ஆசிரியை வெளியே வந்துள்ளார். இதைக் கவனித்த மாணவிகள் ஏன் அழுகிறீர்கள் என ஆசிரியரிடம் கேட்டுள்ளனர். மேலும் இதுபற்றி அந்த ஆசிரியரின் பெற்றோரிடமும் மாணவிகள் கூறியுள்ளனர். பெற்றோர் விசாரித்ததில் ரவியின் பாலியல் தொல்லை விவகாரம் அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து அந்த ஆசிரியை பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆசிரியைகள், மாணவிகளை ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் கல்லூரியில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கல்லூரி நிர்வாகி ரவி கைது செய்யப்பட்டார். மேலும் ரவிக்கு உதவியதாக கல்லூரியின் இணை இயக்குநர்கள் நளினி, கலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கல்லூரியில் ஒரு சில மாணவிகளும், சில ஆசிரியைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

இந்தக் கல்லூரியில் வேலை பார்த்துவிட்டு பாலியல் பிரச்னை காரணமாக பல ஆசிரியைகள் வேலையை விட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ரவியின் பாலியல் தொல்லையை எதிர்க்காமல் இருந்தால் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் எந்தப் பிரச்னை ஏற்படுத்துவது இல்லை என்றும் எதிர்த்தால் அவர்களுக்கு அலுவலக ரீதியாக டார்ச்சர் கொடுத்து வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்தக் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் சின்ன கேமராக்கள் பொருத்தி அதன்மூலம் மாணவிகளை ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் ரவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சி விவகாரம் பற்றி எரிந்து வரும் இந்நிலையில் கல்லூரி நிர்வாகி ஆசிரியைகளின் உதவியுடன் மாணவிகள் மற்றும் சக ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.