`பொறுப்பை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைத்துவிட்டேன்!' - ராமதாஸ் பேச்சு | Handed over responsibility to minister cv sanmugam says Ramadoss

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:28 (25/03/2019)

`பொறுப்பை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைத்துவிட்டேன்!' - ராமதாஸ் பேச்சு

``திருமாவளவனுக்கு தி.மு.க ஏன் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை” என்று தமிழகச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சி.வி.சண்முகம்

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தே.மு.தி.க எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ``கடந்த 25 ஆண்டுக்காலமாக இந்த விழுப்புரம் மாவட்டத்தில் அமைதியான சூழல் நிலவி வருகிறது.. அந்த அமைதிக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றுதான். இங்குப் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவர்களின் சமுதாயத்திற்குப் போராடுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அவர்களால் பயனடையவில்லை. அதற்கு நேர் மாறாக இருப்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சி. அவர்களுக்குக் கிடைத்தது இரண்டு அமைச்சர் பதவிகள். அவர்கள் நினைத்திருந்தால் அதை அவர்கள் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால், அதைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கொடுத்த ஒரே இயக்கம் பா.ம.க. 1998-ல் சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்ற தலித் ஏழுமலைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

மருத்துவர் ராமதாஸ்

அடுத்தது பேராசிரியர் பொன்னுசாமி. இவருக்கு ஏதோ குழந்தைகள் நலம், பெண்கள் நலம் என்ற உப்புச்சப்பில்லாத அமைச்சர் பதவியைக் கொடுக்கவில்லை. இந்தியாவிலேயே பணம் காய்க்கும் துறையான பெட்ரோலியத் துறையைக் கொடுத்து அழகு பார்த்தது பா.ம.க. இதை இப்போது கூற காரணம் இருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றது தி.மு.க. அதில் எத்தனை  பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தார்கள்? ஏன் திருமாவளவன் வெற்றிபெற்றாரே அவருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்ததா இந்த தி.மு.க? ஆனால் பா.ம.க கொடுத்து அழகு பார்த்தது. அதேபோல பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழுமலையை திருச்சி பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றிபெற வைத்தவர் மறைந்த எங்கள் அம்மா. அப்படி அனைவரையும் சமமாகப் பாவிக்கும் இயக்கம் எங்கள் அ.தி.மு.க.

எல்.கே.சுதீஷ்

இனி மாநில அரசின் தயவில்லாமல் மத்தியில் ஆட்சி அமையாது. அதேபோல நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. அதனால் பா.ம.க, தே.மு.தி.க, பா.ஜ.க இவர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால் இதற்கு முன்பும் நாம் கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால் அந்தத் தேர்தல் முடிந்தவுடன் ஏதோ ஒரு காரணத்திற்காக நம் கூட்டணியில் முறிவு ஏற்பட்டுவிடும். அதனால் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பு தொண்டர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. தலைவர்கள் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் வெற்றி பெற்றுவிடுகிறார்கள். ஆனால் உயிரைக் கொடுத்து நம் வெற்றிக்குப் பாடுபடும் அடிமட்டத் தொண்டர்களுக்கு உள்ளாட்சிப் பதவிகள் கிடைப்பதில்லை. ஆனால் இந்த முறை அது நடக்காது. இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். அதனால் தொண்டர்கள் நம்பிக்கையோடு இருங்கள். அனைத்தும் நமக்குத்தான். நம்மை யாராலும் அசைத்துவிட முடியாது” என்றார்.

பாமக

தே.மு.தி.கவின் கள்ளக்குறிச்சி வேட்பாளர் சுதீஷ், ``தேமுதிக, பா.ம.க, அ.தி.மு.க மூன்றும் மிக பலமாக உள்ள பகுதி இந்தப் பகுதி. மூங்கில்துறைப்பட்டில் இருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில்தான் எங்கள் அப்பா பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது நானும் எனது சகோதரியும் கள்ளக்குறிச்சியில்தான் படித்துக்கொண்டிருந்தோம். அந்தக் காலகட்டத்தில் கேப்டன் படங்கள்தான் அதிகமாக ஓடும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்போது நான் சிறியவனாக இருக்கும்போது மருத்துவர் ஐயாவைப் பார்த்திருக்கிறேன். போராளி என்றால் அது மருத்துவர் ஐயாதான். ஒவ்வொரு கிராமத்திற்கும் சைக்கிளிலும், பஸ்சிலும் சென்று இந்தப் பாட்டாளி மக்கள் கட்சியை அவர் எப்படி வளர்த்தார் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. எங்கள் கேப்டனிடம் நான் ஆசி பெறும்போது அவர் சொன்ன வார்த்தை, தைலாபுரம் சென்று ஐயாவைப் பார் என்பதுதான். அதனால் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமல்ல, 18 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் நமது கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்” என்றார்.

மருத்துவர் ராமதாஸ் பேசும்போது, ``அ.தி.மு.க அளவிற்குத் தமிழகத்தில் எந்தக் கட்சியும் தேர்தல் வியூகங்களை வகுத்தது கிடையாது, பா.ம.க உட்பட. இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை வெற்றி நிச்சயம். ஏனென்றால் அந்தப் பொறுப்பை அமைச்சர் சண்முகத்திடம் விட்டுவிட்டேன். கவனமாகப் பணியாற்றுங்கள் வெற்றி நமக்கே” என்று முடித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க