`கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் புறக்கணிப்பு' - முதல்நாள் பிரசாரத்திலேயே சர்ச்சையில் ஓ.பி.எஸ் மகன்! | controversy in ops son first day Campaign

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:22 (25/03/2019)

`கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் புறக்கணிப்பு' - முதல்நாள் பிரசாரத்திலேயே சர்ச்சையில் ஓ.பி.எஸ் மகன்!

பிரசாரம் ஆரம்பித்த முதல் நாளில், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரசார வாகனத்தில், கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் புறக்கணிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவீந்திர நாத்குமார்

தேனி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாள்களாக சென்னையில் இருந்த ரவி, இன்று தேனி வந்தார். வழக்கமாக, தேனி மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்படுபவர், தேனி மாவட்ட எல்லையான காடுரோடு அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தை துவங்குவது வழக்கம்.

பிரசாரம்

அந்த வகையில், இன்று மதியம் 1.40 மணிக்கு பட்டாளம்மன் கோயிலுக்கு தனது தந்தையுடன் வந்த ரவீந்திரநாத்குமார், சுவாமி தரிசனம் செய்தார். உடன், ஆண்டிபட்டி அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜன், தேனி எம்.பி பார்த்திபன், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சையதுகான், கம்பம் எல்.எல்.ஏ ஜக்கையன், கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ.க, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஓ பி எஸ் மகன்

சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தயாராக இருந்த பிரசார வாகனத்தில் ஏறி பிரசாரத்தைத் தொடங்கினார் ரவீந்திரநாத்குமார். அந்தப் பிரசார வாகனத்தில் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் எதுவும் இல்லாமல், அ.தி.மு.க கொடி மட்டும் இருந்தது. அதைக் கவனித்தும் கவனிக்காதது போல ரவீந்திரநாத்குமார் இருந்துவிட்டார். பிரசார வாகனத்தில் ரவியுடன் இருந்த தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அதைக் கவனித்ததும், எதுவும் பேச முடியாமல் அமைதியாகிவிட்டார். கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் முதல் நாளே புறக்கணிப்பிற்கு உள்ளானது, அங்கு வந்திருந்த கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது.