`பட்டாளம்மன் கோயிலில் சாமி தரிசனம்' - பிரசாரத்தைத் தொடங்கிய ஓ.பி.எஸ் மகன்! | Ops son who started campaigning from the temple of battalam

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:22 (25/03/2019)

`பட்டாளம்மன் கோயிலில் சாமி தரிசனம்' - பிரசாரத்தைத் தொடங்கிய ஓ.பி.எஸ் மகன்!

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அறிவிப்பு வெளியாகிய இரண்டு நாள்களும், சென்னையில் கட்சி மூத்த நிர்வாகிகளை சந்தித்துவிட்டு இன்று தேனி திரும்பியவர், பிரசாரத்தைத் தொடங்கினார். முன்னதாக பிரசித்திபெற்ற பட்டாளம்மன் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

ஓ பி எஸ் மகன்

தேனிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யாரும், தேனி மாவட்டத்திற்குள் நுழையும் முன்பாக தேனி மாவட்ட எல்லைப் பகுதியான ஜி.கல்லுப்பட்டியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டு அங்கிருந்து பிரசாரத்தைத் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இன்று மதியம் 1.40 மணிக்கு ஜி.கல்லுப்பட்டிக்கு வந்த ரவீந்திர நாத்குமார், பட்டாளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஓ பி எஸ் மகன்

உடன், ஓ.பன்னீர்செல்வம், ஆண்டிபட்டி அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜன், தேனி எம்.பி பார்த்திபன், அ.தி.மு.க மாவட்டச்செயலாளர் சையதுகான், கம்பம் எல்.எல்.ஏ ஜக்கையன், கூட்டணிக்கட்சிகளான தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ.க, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, காட்டுரோடு, செங்குளத்துப்பட்டி, புள்ளக்காபட்டி, தேவதானப்பட்டி, தர்மலிங்கபுரம் வழியாக பெரியகுளம் சென்றடைந்தனர்.