``என் சின்ன வயசுல இருந்து இதைத்தான் சொல்றாங்க!' - திராவிடக் கட்சிகளைக் கலாய்த்த கமல்ஹாசன் | kamalhasan smash admk dmk parties election manifesto

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (20/03/2019)

கடைசி தொடர்பு:19:10 (20/03/2019)

 ``என் சின்ன வயசுல இருந்து இதைத்தான் சொல்றாங்க!' - திராவிடக் கட்சிகளைக் கலாய்த்த கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக் கூட்டம் இன்று சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. முதற்கட்டமாக ம.நீ.மன்றத்தின் 21 நாடாளுமன்ற வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த கமல்ஹாசன், தி.மு.க., அ.தி.மு.க.வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை எல்லாம், தனது சிறுவயதிலிருந்தே வெறும் வாய் வார்த்தையாக இருப்பவைதான் என விமர்சித்தார்.

கமல்

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ``எங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களின் ஆதார தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் கவனம் செலுத்தியுள்ளோம். குடிநீர், கல்வி, மருத்துவம் ஆகிய தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி, மீதியுள்ள வேட்பாளர் பட்டியலோடு, தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும்" என்றவரிடம், தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சிரித்தபடி, அந்த வாக்குறுதிகள் பல ஆண்டுகளாக வெறும் வாக்குறுதிகளாகவே இருப்பதாகக் குறிப்பிட்ட கமல்ஹாசன், ``என் சின்ன வயசுல இருந்தே ஈர்த்த வாக்குறுதிகள்தான். அதைச் செயல்படுத்ததான் அவர்களால் முடியவில்லை. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் களமிறங்கியுள்ளோம்." என்றார். ``அ.தி.மு.க, தி.மு.க.வில் வாரிசுகளுக்கு `சீட்' வழங்கப்பட்டுள்ளதே?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

``நமது தமிழ்நாட்டை ஆங்கிலத்தில், `லேன்ட் ஆப் ரைசிங் சன்' என்பார்கள். அந்த சன், சூரியனல்ல, வாரிசுகள் என்பது இப்போதுதான் புரிகிறது'' என்று கமல்ஹாசன் பதிலளிக்க, அரங்கில் கைதட்டல் அதிர்ந்தது. ``சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய `நேச்சுரல்ஸ்' குமாரசாமி, `கமல்ஹாசன் அரசியல் தலைவராகச் செயல்படவில்லை. ஒரு நடிகராகதான் செயல்படுகிறார்' என விமர்சித்திருக்கிறாரே?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குச் சூடான கமல்ஹாசன், ``அவர் வெறும் தொழிலதிபர்தான். இன்னும் அரசியலுக்கு வரவில்லை. ஒரு வாக்காளப் பெண்மணியாக குமாரசாமியை மட்டுமல்ல, யாரை வேண்டுமானாலும் கேள்வி எழுப்புவதற்கு கோவை சரளாவுக்கு உரிமை உள்ளது. அவர் ஒருவர் உட்கட்சி பிரச்னை என்று கூறிவிட்டால், அது உண்மையாகிவிடுமா?" என்று கேள்வி எழுப்பினார். இராமநாதபுரத்தில் கமல்ஹாசன் போட்டியிடப் போவதாக தகவல் கிடைத்துள்ளதே என ஒருவர் கேள்வி எழுப்ப, ``உங்களுக்குக் கிடைத்தது போல, எனக்கும் அது தகவல் தான். மார்ச் 24-ம் தேதி கோவைக்கு வாருங்கள் விடை கிடைக்கும்.'' என்று சிரித்தபடி விடைபெற்றார்.