`இன்னமும் கையேந்திக்கொண்டிருந்தால் எப்படி?' - சரத்குமாருக்கு ஷாக் கொடுத்த நிர்வாகிகள் | District Secretaries left from samathuva makkal katchi

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:26 (25/03/2019)

`இன்னமும் கையேந்திக்கொண்டிருந்தால் எப்படி?' - சரத்குமாருக்கு ஷாக் கொடுத்த நிர்வாகிகள்

சமத்துவ மக்கள் கட்சிக்கு எதிராக 4 மாவட்ட செயலாளர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். `கட்சியில் நிலவும் அதிருப்தியே காரணம்' என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் கிச்சா ரமேஷ், ``நான் நடிகர் சங்கத்திலிருந்தே சரத்குமார் உடன் பயணிக்கிறேன். சமத்துவ மக்கள் கட்சியில் சேர்ந்து பயணித்துவந்தேன். நேற்று முன் தினம் நான் பேசும்போது, தனித்துதான் போட்டி என்று தலைவர் கூறினார். ஆனால், இன்று வரை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை. இன்னமும் மற்றவர்களிடம் கையெந்துக்கொண்டிருந்தால் எப்படி? மாநில நிர்வாகிகள் சரத்குமாரை திசை திருப்புகின்றனர். இன்று, நான் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறேன் என்று தெரிந்தே என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர்.

மாநில நிர்வாகிகள், தலைவரை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார்கள். சேவியர் (மாநில பொதுச்செயலாளர் ) குழப்பத்தை ஏற்படுத்துகிறார். 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை வாங்கிக்கொண்டுதான் மாவட்ட பொறுப்பு போடுகிறார்கள். இது, தலைவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. மாநில நிர்வாகிகள் பணத்தின்மீது குறியாக இருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் 35 மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளார்கள்'' என்றார். 

சரத்குமார்


தொடர்ந்து பேசிய கிரிபாபு (திருவள்ளுவர் வடக்கு மாவட்ட செயலாளர்),  ``நான் இப்பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை. என்னுடைய பதவியை ஊடகங்கள் முன் ராஜினாமாசெய்கிறேன்'' என்றார். 


திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர், ``தலைவர் மீது நான் பற்றுக் கொண்டவன். ஆனால், சமீபத்திய நிகழ்வுகளால் நான் தொடர்ந்து பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை' என்றார்.


தென்சென்னை மத்திய மாவட்டச் செயலாளர் தக்காளி முருகேசன், ``கட்சி உறுப்படாமல் போகக் காரணம் சேவியர் தான். தலைவரை நான் குறை சொல்ல மாட்டேன். அவர் அன்பானவர். நான் வளர்ந்துவிடுவேன் என்றுதான் சேவியர் இவ்வாறு செய்கிறார். என்னை சரத்குமார் அழைத்தால் நிச்சயமாக செல்வேன். மாவட்டச் செயலாளர்களை முறையாக அழைத்துப் பேசுவதில்லை. சரத்குமார் தனித்து நிற்கத்தான் நினைக்கிறார். கமல் வேட்பாளர் பட்டியல் அறிவித்துவிட்டார். தனித்து நிற்கிறோம் என்று சொல்லிவிட்டு கூட்டணி என்றால் எப்படி வாக்களிப்பார்கள்? வேறு கட்சியில் சேரும் எண்ணம் இல்லை. தேவைப்பட்டால் சுயேட்சையாக நிற்பேன். எங்களை மதித்து எங்கள் பகுதிக்கு நல்லது செய்பவர்களுக்கு எங்கள் ஆதரவு'' என்றார்.