கன்னியாகுமரி தொகுதிக்கு சென்னை வேட்பாளரா? - மக்கள் நீதி மய்ய வேட்பாளருக்கு உள்ளூரில் எதிர்ப்பு | Kanyakumari constituency makkal needhi maiam cadres opposes candidate

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:28 (25/03/2019)

கன்னியாகுமரி தொகுதிக்கு சென்னை வேட்பாளரா? - மக்கள் நீதி மய்ய வேட்பாளருக்கு உள்ளூரில் எதிர்ப்பு

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளராக சென்னையில் வசிக்கும் எபினேசர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

எபினேசர்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடும் படலத்தில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளனர். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டார். அதில் கன்னியாகுமரி தொகுதிக்கு வேட்பாளராக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் எபினேசர் அறிவிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட எபினேசர் பிறந்தது, வளர்ந்தது, தொழில் செய்வது எல்லாமே சென்னையில்தான். அவர் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது உள்ளூர் நிர்வாகிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேரி ஆனி - கமல்


இதுகுறித்து நம்மிடம் பேசிய மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஒருவர், ``கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு சட்டசபை தொகுதிகளிலும் 18 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் நித்திரவிளை டாக்டர் மேரி ஆனி, நாகர்கோவிலைச் சேர்ந்த கணேசன் ஆகியோர் முயற்சிசெய்தார்கள். இந்த இருவரில் யாராவது ஒருவருக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த உயர்மட்டக் குழு உறுப்பினர் எபினேசருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர்க்காரர்களுக்கு சீட் வழங்காதது ஏமாற்றமாக உள்ளது" என்றார்.