`சிட்டுக்குருவிகளால் என்ன பயன்?' - நெல்லையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி | nellai green movement is encourages the people to help sparrows

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (20/03/2019)

கடைசி தொடர்பு:20:15 (20/03/2019)

`சிட்டுக்குருவிகளால் என்ன பயன்?' - நெல்லையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு, நெல்லை மாவட்டம்  வள்ளியூரில் பசுமை இயக்கம் சார்பாக பொதுமக்களிடம் சிட்டுக்குருவி பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இலவசமாக குருவிக் கூண்டு வழங்கப்பட்டது.

சிட்டுக்குருவி தினம்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில், பசுமை இயக்கம் சார்பாக உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. வள்ளியூர் காவல் துறை கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், மோட்டார் வாகன ஆய்வாளர் விநாயகம் மற்றும் பசுமை இயக்க உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த விழாவில், சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியம்குறித்து விரிவாகப் பேசப்பட்டது.  

சிட்டுக்குருவிகளினால் மனித இனத்திற்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் பேசினார். மரம் வளர்ப்பதன் அவசியத்தையும், அதன்மூலம் பறவைகள், விலங்குகள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர் வலியுறுத்திப் பேசினார். 

விழாவில் பங்கேற்ற டி.எஸ்.பி

மோட்டார் வாகன ஆய்வாளர் விநாயகம் பேசுகையில், ‘குருவிகள், வயல்களில் உள்ள தீமை விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கின்றன. அத்துடன், வீட்டில்  உள்ள கொசு முட்டைகள் உள்ளிட்ட மனித இனத்துக்குத் தீங்கு விளைவிக்கும் உயிரினங்களை அழிக்கின்றன. அதனால், குருவிகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்’ எனப் பேசினார். 

குருவி கூண்டு விநியோகம்

இந்த விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு, குருவிகளைப் பராமரிப்பதற்கான கூண்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன. அவற்றை வீடுகளில் பாதுகாப்பான இடத்தில் வைத்தால், குருவிகள் அதில் வந்து தங்கிக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பலரும் கூண்டுகளை ஆர்வத்துடன் வாங்கிச்சென்றதுடன், குருவிகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்தனர்.