கந்துவட்டி கொடுமையால் மனமுடைந்த நபர் - கரூர் கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி! | Man trying to suicide in front of collector office near karur

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (20/03/2019)

கடைசி தொடர்பு:22:00 (20/03/2019)

கந்துவட்டி கொடுமையால் மனமுடைந்த நபர் - கரூர் கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி!

கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் ஒருவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

 தற்கொலை முயற்சி

 கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்களும், மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களும் தீவிர கட்டுப்பாட்டுக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, பெரிய வடுகபட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவர், தன் குடும்பத்தோடு கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அந்தோணிராஜ் அந்தப் பகுதியில் டூவீலர் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இப்பகுதியில் கந்து வட்டித் தொழில் செய்யும் ஒருவரிடம், ரூபாய் 40,000 கடன் பெற்றுள்ளார். 


 தற்கொலை முயற்சி...

அந்தப் பணத்தை வட்டியோடு திரும்பச் செலுத்த வற்புறுத்தி கடன் கொடுத்த நபர் நெருக்கடி கொடுத்ததால், மனமுடைந்த அந்தோணிராஜ், தன் மனைவி, தன் இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு காவலுக்கு இருந்த போலீஸார் பாதுகாப்பையும் தாண்டி, திடீரெனக் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதி உள்ளதால், அங்கு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணிபுரிந்து வருகின்ற சூழலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட காவல்துறையினர் அவரது நடவடிக்கையைத் தடுத்து, நால்வரையும் மீட்டு தாந்தோணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால், கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.