அதிருப்தியில் தே.மு.தி.க; உட்கட்சிப் பூசலில் காங்கிரஸ் - விருதுநகர் தேர்தல் கலாட்டா! | election campaign dull in virudhunagar constituency

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:29 (25/03/2019)

அதிருப்தியில் தே.மு.தி.க; உட்கட்சிப் பூசலில் காங்கிரஸ் - விருதுநகர் தேர்தல் கலாட்டா!

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க மீதான மக்களின் அதிருப்திக்கு மத்தியில் தே.மு.தி.க வேட்பாளரும், உட்கட்சிப் பூசலுடன் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் களமிறங்கும் நிலையில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. 7,14,606 ஆண்கள், 7,44,588 பெண்கள், 122 திருநங்கைகள் என மொத்தம் 14,59,316 வாக்காளர்கள் விருதுநகர் தொகுதியில் உள்ளனர். அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க உறுப்பினர் அழகர்சாமி போட்டியிடுகிறார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது.

மாணிக்தாகூர்

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது அ.தி.மு.க சார்பில் மக்களுக்கு போதிய அறிமுகமில்லாத ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், வெற்றிக்குப் பின்பும் மக்களுக்கு அறிமுகமில்லாமலேயே போய்விட்டார். மக்களைச் சந்தித்து தொகுதி பிரச்னைகள் குறித்து கேட்டதோ, தொகுதி மேம்பாட்டுக்கான திட்டங்களையோ செயல்படுத்தியதோ எதுவும் கிடையாது. இதனால் அவர் மீது விருதுநகர் தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதன் காரணமாகவே அ.தி.மு.கவினர் அதிகம் உள்ள இந்தத் தொகுதி கூட்டணிக் கட்சியான தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்பட்டது. தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி பிரசாரத்தை தொடங்கிவிட்டார். ஆனால், கடந்த முறை பதவியில் இருந்த ராதாகிருஷ்ணன் மீதான அதிருப்தி, சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களின் அதிருப்தி போன்றவை அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.கவையும் சேர்ந்தே பாதிக்கும்.

அழகர்சாமி

அதேவேளையில் காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்காத நிலையில் முன்னாள் மக்களவை உறுப்பினர் மாணிக்தாகூரையே மீண்டும் நிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினரும், அவரைத் தவிர யாரை வேண்டுமானாலும் நிறுத்துங்கள் அவரை மட்டும் நிறுத்தக் கூடாது என மற்றொரு தரப்பினரும் கட்சித் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். வேட்பாளர் தொடர்பாக விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பிரச்னையே நடந்து வருகிறது. மாணிக்தாகூரை நிறுத்தினால் ஒரு தரப்பினர் வேலை செய்யமாட்டார்கள். அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நிறுத்தினால் மாணிக்தாகூர் ஆதரவாளர்கள் வேலை செய்யமாட்டார்கள்.

இந்நிலையில் அ.தி.மு.க மீதான மக்களின் அதிருப்தியைச் சமாளித்து தே.மு.தி.க வேட்பாளர் வெற்றி பெற போகிறாரா? இல்லை உட்கட்சி பூசலைச் சமாளித்து காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற போகிறாரா? என்பது விருதுநகர் மக்களவைத் தொகுதி வாக்காளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் கையில்தான் உள்ளது.