தைலாபுரம் தோட்டத்து செக்யூரிட்டி உங்களை விடமாட்டார் - அறிமுக கூட்டத்தில் திமுக வேட்பாளர் பேச்சு | Thailapuram security will not let you in says dmk candidate

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (21/03/2019)

கடைசி தொடர்பு:09:49 (21/03/2019)

தைலாபுரம் தோட்டத்து செக்யூரிட்டி உங்களை விடமாட்டார் - அறிமுக கூட்டத்தில் திமுக வேட்பாளர் பேச்சு

தருமபுரியில் தி.மு.க நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் டி.என்.சி மஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேரகன், கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர் கலந்து கொண்டனர்.

திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி,  ``மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி தருமபுரி மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவந்தார். இதுதவிர மத்திய அரசியல் அங்கம் வகித்தபோது தருமபுரி மாவட்டத்திற்கு என்று நான்கு ரயில்வே மேம்பாலங்கள் கொண்டு வந்தது தி.மு.க ஆட்சி. தருமபுரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சிப்காட் கொண்டுவரக் கொண்டு வந்தது தி.மு.க ஆட்சி. ஆனால் சிப்காட் திட்டத்தை எதிர்த்து கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த கட்சி பா.ம.க. தி.மு.க கொண்டுவந்த திட்டத்தை எல்லாம் நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்று கூறுவதைத் தவிர வேறு எந்த சாதனையும் அன்புமணி செய்துவிடவில்லை.

முதன்முதலில் ரயில் திட்டத்தைக் கொண்டு வந்தது அறிவித்தது யார்...? நமது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைசெல்வன். ஆனால், நான் தான் கொண்டு வந்தேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது பா.ம.க-வின் ஏமாற்று வேலை.இதோ நம்மிடம் இருக்கும் நமது வேட்பாளர் வேறு யாருமில்லை நம் மண்ணின் மைந்தர் நமக்கெல்லாம் அறிமுகமான டி.என்.வி குடும்பத்தின் வாரிசு டாக்டர் செந்தில்குமார், இவர்தான் நமது தளபதி தேர்வு செய்து கொடுத்துள்ள வேட்பாளர். இவரை வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்போம் என்றார்.

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய டாக்டர் செந்தில்குமார். நான் வடிவேல் கவுண்டர் பேரன், செல்வராஜின் மகன் எனது வீடு சின்னசாமி நாயுடு தெருவில் உள்ளது. எனது வீட்டிற்கு நீங்கள் எப்போது வந்தாலும் என்னைச் சந்திக்க முடியும். என்னுடன் ஒரு கப் காபி சாப்பிடலாம். சாப்பாடும் சாப்பிடலாம். ஆனால் என்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளருக்குச் சொந்த ஊர் திண்டிவனம். உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், நான் ஓடோடி வருபவன். ஆனால் அவர்... உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அவரது வீடு தைலாபுரம் தோட்டத்தில், நீங்கள் சென்றாலும் தைலாபுரம் தோட்டத்து செக்யூரிட்டி உங்களை விடமாட்டார். அவரை எளிதாகச் சந்தித்துவிட முடியாது. அப்படிப்பட்ட வேட்பாளர் உங்களுக்குத் தேவைதானா..? தருமபுரி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலா அன்புமணி ராமதாஸ், சட்டமன்றத் தேர்தலா பென்னாகரத்தில் அன்புமணி ராமதாஸ் அந்த பேராசைக்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பென்னாகரம் படுதோல்வி கிடைத்தது. இப்போது மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இதுவே உங்களுக்குக் கடைசி தேர்தலாக இருக்கும். இந்த தேர்தலோடு உங்களைத் தருமபுரி மக்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப் போகின்றார்கள்.

அன்புமணியிடம் இல்லாத ஒன்று என்னிடம் உள்ளது, நான் உங்கள் ரத்தம் சொந்தம் என்னை ஆதரியுங்கள் என்று  பேசி முடித்தார்.