``ஜெயலலிதா இருந்தாலும் தேனி வேட்பாளர் ரவிதான்!” - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேச்சு | TN Minister Udhaya kumar controversy speech

வெளியிடப்பட்ட நேரம்: 07:16 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:30 (25/03/2019)

``ஜெயலலிதா இருந்தாலும் தேனி வேட்பாளர் ரவிதான்!” - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

 

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று தேனியில் நடைபெற்றது. அதில், தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் மற்றும் ஆண்டிபட்டி அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜன் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ-க்கள் ஜக்கையன், நீதிபதி மாணிக்கம் வந்திருந்தனர். கூட்டத்தில் தே.மு.தி.க, பா.ஜ.க, புதிய தமிழகம் கட்சி, பா.ம.க ஆகிய கட்சிகளின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேடையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ரவீந்திரநாத்குமார் தேனியில் நிறுத்தப்பட்டதால், யாரை நிறுத்தலாம் எனக் காங்கிரஸ் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் வேட்பாளரைத் தேடிக்கொண்டிருக்கிறார். அவரேகூட நிற்கலாம் என்று சொல்கிறார். தனது உழைப்பால் எம்.பி சீட் வாங்கியிருக்கிறார் ரவீந்திரநாத்குமார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தாலும் ரவீந்திரநாத்குமாரைத்தான் வேட்பாளராக அறிவித்திருப்பார்” என்றார்.

ரவீந்திரநாத் குமார்

``2016-ம் ஆண்டு, ஜெயலலிதாவால், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உட்பட ஐவர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தார் வகித்த அனைத்துப் பதவிகளும் பறிக்கப்பட்டன. அதுவரை தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் மாவட்டச் செயலாளராக இருந்த ரவீந்திரநாத்குமாரின் பதவியும் பறிபோனது. இந்நிலையில், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் ரவிக்கு சீட் கொடுத்திருப்பார் எனப் பேசுவது எந்த விதத்திலும் சரியாக இருக்காது. அவர் அதற்கு நிச்சயம் அனுமதித்திருக்க மாட்டார்” எனக் கட்சிக்குள் கொஞ்சம் சத்தமாகவே கிசுகிசுக்கிறார்கள்.