``சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிகளைக் குவிப்போம்’’ - தேசிய உழவர் உழைப்பாளர் கட்சி வேட்பாளர் சூளுரை | Jothikumar who Contest in karur constituency in Lok sabha election 2019

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:31 (25/03/2019)

``சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிகளைக் குவிப்போம்’’ - தேசிய உழவர் உழைப்பாளர் கட்சி வேட்பாளர் சூளுரை

``நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். எத்தனை குழப்பங்கள், சூழ்ச்சிகள் செய்தாலும், அஅவற்றை முறியடித்து வெற்றி பெறுவோம்’’ என்று தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜோதிகுமார் தெரிவித்தார்.

 வேட்புமனு தாக்கல் செய்யும் ஜோதிகுமார்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதையொட்டி, அத்தனை பிரதானக் கட்சிகளும் கூட்டணிகள் அமைத்து, தேர்தலுக்குத் தயாராகிவிட்டன. பல கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தில் குதிக்க, காங்கிரஸ் கட்சியில் இன்னும் வேட்பாளரையே அறிவிக்காத நிலை உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் நபராக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார், தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜோதிகுமார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரி அன்பழகன் அவர்களிடம் கரூர் மக்களவை தொகுதியில் முதல் மனுவாகத் தாக்கல் செய்தார். அவருடன், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பழனிசாமி மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய உழவர் உழைப்பாளர் கட்சியின் கரூர் மக்களவை வேட்பாளர் ஜெ. ஜோதிகுமார், ``தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. கரூரில் தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கரூர் மக்களவைத் தொகுதியில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தினாலும், எதிரிகள் வகைவகையாகச் சூழ்ச்சிகள் செய்தாலும், அவற்றை முறியடித்து நிச்சயம் வெற்றி பெறுவோம். மேலும், ஏழை விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்’’ என்றார்.