‘வெற்றியோ, தோல்வியோ தொகுதி மக்களை நான் மறந்ததில்லை’ - அவினாசியில் ஆ.ராசா பேச்சு | A.raja Speech on election on Election Campaign

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:31 (25/03/2019)

‘வெற்றியோ, தோல்வியோ தொகுதி மக்களை நான் மறந்ததில்லை’ - அவினாசியில் ஆ.ராசா பேச்சு

வெற்றியானாலும் தோல்வியானாலும் என் தொகுதி மக்களை நான் என்றுமே மறந்ததில்லை என நீலகிரித் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா தெரிவித்திருக்கிறார்.

ஆ.ராசா

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவினாசி பகுதியில் நேற்று தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவினாசி புதிய பேருந்து நிலையம் முன்பாக பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், ``வெற்றியானாலும்  தோல்வியானாலும் என் தொகுதி மக்களை நான் என்றுமே மறந்ததில்லை. தற்போது நீலகிரித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நபரை இதுவரை நானும் பார்த்ததில்லை. நீங்களும் பார்த்ததில்லை. எனவே, மீண்டும் ஒருமுறை நாம் ஏமாந்துவிடக் கூடாது.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சிக்கு பாடம் புகட்டவும் மத்தியில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மதவாத ஆட்சி செய்கிற மோடி அரசை அப்புறப்படுத்தவும் இந்தத் தேர்தலை நாம் சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். எனவே, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியிருக்கிற மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு நீங்கள் வாக்களித்து இந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.