``21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும்!” - தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் நம்பிக்கை | DMK Leader MKStalin Speech in Tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 08:36 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:32 (25/03/2019)

``21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும்!” - தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் நம்பிக்கை

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிது. ஏழு ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் பொள்ளாச்சிக்குப் பொல்லாத ஆட்சியாக மாறியதோடு அங்குள்ள பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளது எனத் தஞ்சாவூரில் ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்

தஞ்சாவூர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியதாவது, நாடாளுமன்றத் தேர்தல் ஐந்தாண்டுகளைப் பூர்த்தி செய்துவிட்டு நியாயமாக வந்து நடைபெற உள்ளது. ஆனால், இடைத்தேர்தல் ஏன், எப்படி வந்தது என அதற்கான காரணம் உங்களுக்கு தெரியும். இவர்கள் ஆட்சி மாற்றத்துக்குக் குரல் கொடுக்கவில்லை, முதல்வரை மாற்ற குரல் கொடுத்தார்கள். ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்மீது ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வருகிறது. இதில் அவர்களுக்குத் தலைக்கு மேல் கத்தித் தொங்கிக்கொண்டிருக்கிறது. 18 சட்டமன்றத் தொகுதிகளுடன் மற்ற மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக் கூறினோம். நீதிமன்ற வாயிலாக அதற்கான வாய்ப்புகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. 21 தொகுதிக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது.

கஜா புயல் பாதிக்கப்பட்டபோது, நானும் கட்சித் தொண்டர்களும் உடனடியாக இங்கு வந்து தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோம். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் கிடா விருந்தில் இருந்துவிட்டு ஐந்து நாள் கழித்து ஹெலிகாப்டரில் வந்து பார்த்தார். அதுவும் அரைமணி நேரம்தான். அது க்ளைமேட்டுக்கே பொறுக்கவில்லை என்பதால் பாதியில் திரும்பிச் சென்றார். கஜா பாதிப்புக்கு மோடி ஆறுதல் வார்த்தைகூட சொல்ல வரவில்லை. ஆனால், தேர்தல் வருகிறது என்பதற்காக இப்போது வந்தார் இன்னொரு முறையும் தமிழகத்துக்கு வர இருப்பதாகத் தெரிகிறது.

பிரசாரக் கூட்டத்தில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழர்கள் என்ன இளிச்சவாயர்களா, வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வெளிநாடு வாழ் பிரதமரான மோடிக்கு நமது உணர்வுகள் எப்படிப் புரியும். ஐ.எஸ்.டி மூலம் வந்த 4,545 கோடியில் தமிழகத்துக்கு ஒரு ரூபாய்கூட தரவில்லை. இதைத் தட்டிக்கேட்க தெம்பு இல்லாத ஆட்சி நடக்கிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் நாம் எப்போதும்போல, நீட் தேர்தவை ரத்து செய்வோம் எனக் கூறியுள்ளோம். ஆனால், அ.தி.மு.க நீட் ரத்து செய்வோம் எனக் கூறிவிட்டு, அதற்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டமைப்புகளை நடத்தி வருகிறது. இதிலிருந்து உண்மைகளைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஏழு ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் பொள்ளாச்சி பொல்லாத ஆட்சியாக மாறி அங்குள்ள பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளது. ஊழல், லஞ்சம், கொலை, பாலியல் எனத் தொடரும் இந்த ஆட்சி மட்டுமல்ல மோடி ஆட்சியும் வீட்டுக்கு அனுப்பப்படும். ஜெயலலிதா மரணம் குறித்து நடைபெறும் விசாரணை நியாயமாக நடைபெறாது என எல்லலோருக்கும் தெரியும். தி.மு.க ஆட்சி வந்த  அடுத்த விநாடியே ஜெ மர்ம மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு இதில் தொடர்புடையவர்களைச் சிறையில் அடைப்பது உறுதி. இதை யார் தடுத்தாலும் இந்த ஸ்டாலின் செய்து முடிப்பான். இதை அ.தி.மு.க தொண்டர்கள் ஒவ்வொரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்’’ எனப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க